போதைப்பொருட்கள் மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் இடமொன்று கண்டுபிடிப்பு!

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான ருவன் மது சிந்தனவுக்கு சொந்தமான போதைப் பொருட்களை மறைத்து வைக்க பயன்படுத்திய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித்ரோகண தெரிவித்தார்,

ஹொரணை பிரதேசத்தில் இராணுவ இலக்க தகடு கொண்ட வாகனத்திலிருந்து 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியதாக கடந்த 25 ஆம் திகதி இராணுவ சிப்பாய் ஒருவரும், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாணந்துறை வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்களிருவரும் கைது செய்யப்பட்டிருந்ததுடன் , அவர்களிடமிருந்து 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய ,  வெலிகம காவற்துறை பிரிவுக்குட்பட்ட இமதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ‘தொஸ்த்தரவத்த’  பகுதியில் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்புபிரிவினரால் மோப்ப நாயுடன் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான ருவன் மது சிந்தன என்ற நபருக்கு சொந்தமான போதைப் பொருட்களை , அவரால் நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் சிலர் தொஸ்த்தரவத்த பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது பிலாஸ்ரிக் பீப்பாய்களுக்குள் போதைப் பொருட்களை மறைத்து வைத்து பூமிக்குள் புதைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது 33 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்சமயம் அவர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.