கேப்பாபிலவில் விமானப்படையினரால் அமைக்கப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!
இலங்கை விமானப்படையினரின் 70 ஆம் ஆண்டு நினைவினை முன்னிட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் மூன்று இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான நூலகம் இன்று(01) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை முதல்வர் சு.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு விமானப்படை குறுப் கப்டன் ஏ.டி.ஆர்.லியன ஆராச்சி, முல்லை கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஸ்ரீ.புஸ்பநாதன் உள்ளிட்டவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்கள்.
பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்காக விமானப்படையினரால் அமைக்கப்பட்ட நூலகத்தின் பெயர் பலகையினை கோட்டக்கல்விப்பணிப்பாளர் திறந்து வைக்க, நூலகத்தினை முல்லைத்தீவு விமானப்படை குறுப் கப்டன் பாடசாலைமாணவர்களுடன் நாடாவை வெட்டி திறந்துவைத்துள்ளார்.
இதன் போது நினைவாக வருகை தந்தவர்களினால் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக நூல்களும் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் முல்லைத்தீவு விமானப்படை குறுப் கப்டன் அவர்கள் தமிழில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலைமாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை