முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கத் தயாராகும் எம்.பிக்கள்!
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருகின்றனர். இது தொடர்பில் கட்சி உயர்மட்டங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ள அவர்கள், முதலமைச்சர் வேட்பாளர் பதவி கிடைக்கும் வரை காத்திருக்கின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் எம்.பிக்களே இவ்வாறானதொரு அரசியல் நகர்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் பூர்த்தியான பின்னர் பதவி துறக்கும் அறிவிப்பை இவர்கள் வெளியிடக்கூடும்.
ஊவா மாகாணத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் எம்.பியொருவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். நாடாளுமன்றத்தில் அவரின் இடத்தை நிரப்புவதற்காக உதித்த லொக்கு பண்டார எம்.பியாகப் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட உதித்த லொக்கு பண்டார விருப்பு வாக்கு பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ மாகாணத்தில் மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளில் இருந்தும் எம்.பிக்களே முதலமைச்சர் வேட்பாளர்களாகப் போட்டியிடவுள்ளனர்.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் எம்.பிக்கள் சிலரைக் களமிறக்குவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்கு பல குழுக்கள் தயாராகி வருகின்றன.
மலையகத்தில் மத்திய மாகாணத்தில் புதுமுகங்கள் சிலர் களமிறங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை