சீனி கொள்ளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் -இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்)

 

மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் சீனிக்கொள்ளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

 

நுவரெலியாவில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

” நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இந்நிலையில் சீனி இறக்குமதி மூலம் வரிமோசடி செய்து அரசாங்கத்துக்கு கோடி கணக்கில் வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி கொள்ளையைக்காட்டியும் சீனிக்கொள்ளை பெரிய மோசடியாகக் கருதப்படுகின்றது. மத்திய வங்கி கொள்ளைமூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கம்பனிகளின் வங்கி இருப்புகள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. எனவே, சீனி கொள்ளை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, உரியவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இதன் பின்னணியில் அரச விசுவாசிகள் இருக்கக்கூடும்.

 

அதேவேளை, இந்நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு, சுற்றாடல் அழிவு தொடர்பில் கடந்தகாலங்களில் பிக்குகள் உரத்துக்குரல் எழுப்பினர்.அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், சிங்கராஜ பகுதியில் நடைபெறும் வன அழிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட யுவதியொருவரை மிரட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதுடன், வனத்துறை அதிகாரிகளும் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இது குறித்த யுவதியை அச்சுறுத்தும் செயற்பாடாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம்.

 

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை. இந்நிலையில் சம்பள உயர்வை தடுக்கும் வகையில் கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. எனவே, சம்பளம் கைக்கு கிடைத்த பின்னரே அதனை வெற்றியாக கருதமுடியும்.

 

இதற்கிடையில் வடக்கு, கிழக்கில் அறவழியில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கின்றனர். இவ்வாறு செய்வதைவிட அம்மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.