வடமாகாண ஆளுனருக்கு முன்மாதிரியான சாதனைப் பெண் விருது

வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கு முன்மாதிரியான சாதனைப் பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  (16) பிற்பகல் நடைபெற்ற மாவட்ட மகளிர் தின நிகழ்வின் போதே வடமாகாண ஆளுனருக்கு குறித்த விருது வழங்கப்பட்டது.

தடைகள் பலவற்றைத் தாண்டி ஒரு முன்மாதிரியான சாதனைப் பெண்ணாக, வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும், சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும், அமைச்சின் செயலாளராகவும், தற்போது வட மாகாண ஆளுனராகவும் சிறப்பாக செயல்பட்டமையை பாராட்டியே குறித்த விருது வழங்கப்பட்டது.

வடமாகாண மகளிர் விவாகர அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் இணைந்து குறித்த விருதினை வழங்கி கொளரவப்படுத்தினர்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளைப் படைத்த பெண்களுக்கும், பொருளாதார ரீதியாக சாதனை படைத்த பெண்களுக்கும் இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிலையில் வவுனியாவில் ஊடகத்துறையில் பெண்ணாக தற்துணிவுடன் செயற்பட்டு வருகின்றமையை பாராட்டியும், சமூக மட்டத்தில் பல்வேறு அமைப்புக்கள் ஊடாக தமது ஆளுமையை வெளிப்படுத்தி வருகின்றமையை பாராட்டியும் ஊடகவியலாளர் சிவகுமார் திவியந்தினி அவர்களுக்கு சிறந்த பெண் ஊடகவியலாளர் என்ற விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.