வடக்கின் காணி ஆவணங்களை மீண்டும் யாழ். செயலகத்தில் உடன் ஒப்படையுங்கள் –விவசாய அமைச்சர் மஹிந்தானந்த

அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை இன்றைய தினத்துக்குள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கோப்புகள் அநுராதபுரத்திலுள்ள அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த விடயம் தொடர்பாக நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்போது துறைசார் தரப்பினருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே குறித்த கோப்புக்களை இன்றைய தினத்துக்குள் மீண்டும் யாழ். மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனப் பணித்தார்.

இதேவேளை, அந்தக் கூட்டத்தில் பளை பிரதேசத்தில் காணி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை வெளி மாகாணத்தவர்களுக்கு வழங்கியமை தொடர்பில் பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன் இராணுவத்தினரது பாவனையில் உள்ள காணிகள், அரச காணிகளைக்  காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் ஒரு இலட்சம் முயற்சியாளர்களுக்கான காணி பகிர்ந்தளிப்பு போன்றவற்றிலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே அப்பிரதேசங்களிலுள்ள காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா? என அமைச்சர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடக்கு மாகாண இணைப்பு அதிகாரி எஸ் நிமலனிடம் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த குறித்த அதிகாரி அது உண்மைதான் என்று தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, வடக்கு மாகாண மக்களுக்கு உரித்தான காணிகள் அந்த மாகாண மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனவும், வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காணி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அத்துடன் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் துறைசார் தரப்பினர் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.