ஜெனீவா அழுத்தத்திற்கு அச்சமின்றி முகம்கொடுக்க தயார்-ஜனாதிபதி

ஜெனீவா அழுத்தத்திற்கு நாம் அச்சமின்றி முகம்கொடுப்போம். அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும். நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

நீண்ட காலமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரியாக அடையாளம் கண்டு தீர்ப்பதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடிப்படை அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும். இது அரசாங்கத்தைப் போன்றே அதிகாரிகளுடையவும் பொறுப்பு. நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பயனுள்ள முறையில் வலுப்படுத்தும் அதேநேரம் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அன்று கொழும்பு நகரம் பசுமை நகரமாக உருவாக்கப்பட்டது. 2030 அளவில், 70% சக்தி வளத் தேவைகள் மீள்பிறப்பாக்க மூலங்களிலிருந்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்ட சூரிய சக்தி அமைப்புகளிலிருந்து பிரதான மின் கட்டத்திற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரசாயன உரங்களின் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் 25% குறைக்கப்படுகிறது. இவை அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்கள்.

இந்த முன்னேற்றங்களை சகித்துக்கொள்ளமுடியாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் மாஃபியா குழுக்களும் பொய்களை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

என்ன செய்யப்படுகிறது என்பதை சரியாக பார்க்காமல் தவறான கருத்துக்களினால் ஏமாற்றமடைந்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட சேதம் மீண்டும் நிகழலாம். அப்படி நடந்தால் அந்த சேதத்தை சரிசெய்வது எளிதானதல்ல என்றும் ஜனாதிபதி கூறினார்.

நேற்று (27) முற்பகல் மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தற பிரதேச செயலகப் பிரிவில் கிரிவெல்கெலே வடக்கு கிராம சேவகர் பிரிவில் தேரங்கல மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” 16வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதன் விளைவாகும். ஆதாரமற்ற குற்றச்சாட்டில் படைவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை அளிக்கும் அளவுக்கு நாட்டின் இறையாண்மை சிதைந்தது. பழக்கப்பட்ட யானைகள் தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தி கலாச்சாரம், மதம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எம்.சி.சி ஒப்பந்தம் மற்றும் கிழக்கு முனையம் போன்ற ஒப்பந்தங்களுக்கு வந்தபோது நாடு பெரும் நெருக்கடியில் மூழ்கியது. அவற்றுக்கு இன்று தீர்வுகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அனைத்து பிரச்சினைகளையும் உருவாக்கி அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , கடந்த அரசாங்கத்தின் பிரபலமானவர்கள் ஒருபோதும் ஆட்சியில் இல்லாதது போல் இன்று பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள் என்று ஜனாதிபதி கூறினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசுவது தனது கொள்கை அல்ல என்றாலும், உண்மையை தெளிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கூறினார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகல், காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

கிரிவெல்கெலே வடக்கு கிராம அதிகாரி பிரிவு பிடபெத்தர நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு குடியேற்றமான கிரிவெல்கெலே கிராம அதிகாரி பிரிவு, பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவில் மிகவும் பின்தங்கிய கிராமமாகும். 622 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராம சேவகர் பிரிவின் மக்கள் தொகை 2990 ஆகும். மாத்தறை மாவட்டத்தில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதிகம் இங்கு வாழ்கின்றனர். தேயிலை, கறுவா, இறப்பர், மிளகு மற்றும் தென்னை ஆகியவை முக்கிய வருமான வழிகளாகும்.

“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்க பிடபெத்தற தெஹிகஸ்பே டட்லி சேனநாயக்க மகா வித்யாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அங்கிருந்து தேரங்கல மகா வித்யாலயத்திற்கு செல்லும் வழியில் வீதியின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்களுடன் உரையாடி பிரதேசத்தின் விபரங்களை கேட்டறிந்தார்.

தேரங்கல மகா வித்தியாலயத்தில் எஸ்.எல்.டி மொபிடெல் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட அதிவேக இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்ததுடன், பானகல சீலரத்ன கணிஷ்ட வித்தியாலயத்திற்கு டயலொக் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களை அதிபர்களிடம் ஜனாதிபதி வழங்கினார்.

´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்துவது ஜனாதிபதியின் மற்றொரு நோக்கமாகும். “அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை´ என்ற தலைப்பில் ஜனாதிபதி பாடசாலைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடத் துறைகளில் 500 புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

உரிமை இன்றி இதுவரை அரச காணிகளை பயன்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி பிட்டபெத்தற பிரதேச செயலக பிரிவில் உள்ள ஐந்து குடும்பங்களுக்கு அடையாளமாக உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.

வெள்ளத்தால் அழிக்கப்பட்ட புஹுருதொட்ட, ஜம்புகஸ்தொல, மெடெரிபிட்டிய மற்றும் வேலங்விட்ட உள்ளிட்ட பாலங்களை உடனடியாக அபிவிருத்தி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

காணி சீர்திருத்த ஆணைக் குழுவுக்கு சொந்தமான அங்கீகாரமற்ற காணிப் பயன்பாடு தொடர்பான பிரச்சினைகளை தீர்த்தல், தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான பாரிய காணிகளை பரிசீலணையின் பின்னர் அளவிடல் பணிகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

பிடபெத்தற உள்ளிட்ட புறநகர்ப்பகுதிகளில் உள்ள அனைத்து காணிப் பிரச்சினைகளையும் தீர்க்க “காணி தினம்” திட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதேசத்தின் வீதிகளில் உள்ள பாதுகாப்பற்ற வளைவுகளை அடையாளம்கண்டு பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வழங்கப்பட்டது.

தேரங்கல, பொடிதஹயகந்த பஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து முன்னோக்கிய வீதி, பானகல கிழக்கு மாகேன எல்ல வீதி, பானகல கிழக்கு நாகஹேனா 517 வீதி உள்ளிட்ட சுமார் 120 கி.மீ வீதிகளை அடுத்த சில மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

கறுவா அறுவடைகளை விற்பனை செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவசாயிகள் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். தரம் A கறுவாவினை தரம் B ஆக கூறி கொள்வனவு செய்வதன் அநீதியைத் தடுக்க முறையான அமைப்பு மற்றும் கண்காணிப்பு முறையை வகுக்க ஜனாதிபதி அறிவுறுத்தினார். கறுவா விவசாயிகள் சங்கத்திற்கு சொந்தமான நாற்று மேடைகளுக்கு உயர்தர கறுவா நாற்றுகளை விநியோகிக்க பெருந்தோட்ட அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள சிறிய தேயிலைத் தோட்டங்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளன. தேயிலை மீண்டும் நடவு செய்வதற்கும் அறுவடை செய்வதற்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இவ்வாறு இரண்டு வருட வருமான இழப்புக்கு வருடாந்த கொடுப்பனவை வழங்கி தேயிலை மீள் செய்கையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தலபேகும்புர கணிஷ்ட வித்தியாலயம், தேரங்கல மகா வித்யாலயம், சியம்பலாகொட மேற்கு கணிஷ்ட வித்தியாலயம், கலுபோவிட்டியாவ மகா வித்யாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் அலபலாதெனிய இரண்டாம் நிலை பாடசாலைக்கு ஒரு மேம் பாலத்தை அமைத்தல் போன்றவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

60 கிராம அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் மொரவாக்க குடிநீர் திட்டத்தையும், பல சிறிய சமூக நீர் அலகுகளையும் அமைக்க அறிவுறுத்தப்பட்டது

தேரங்கல சுகாதார மையத்தை புனரமைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அப்பகுதியில் உள்ள சுகாதார மையங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல பொதுப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

adstudio.cloud

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்