மூன்று தசாப்த கால யுத்தத்தின் வலிகளை மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம் – வியாழேந்திரன் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் மற்றய சமூகங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு எம் தமிழ் சமூகத்தை ஒப்பிடும்போது கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும் மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோமென மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அதிமேதகு ஜனாதிபதியின் “நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு”  கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக நாட்டில் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபாரிசு க்கமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சின்னகாலபோட்டமடு கிராமத்தின் பிரதான வீதியினை 01 கிலோ மீட்டர் கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு இன்று (30) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டி வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இரண்டு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படவுள்ள வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வில்
மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வைத்தியலிங்கம் சந்திர மோகன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எந்திரி கே.சிவகுமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியாளர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், பொதுமக்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
அடிப்படை உரிமைகளான வீதி, வீடு, மலசல கூடம் போன்றவை எமது தமிழ்
மக்களுக்கு தேவைதானா என கேட்கும் சில அரசியல்வாதிகளிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். எங்களுக்கு உரிமை தேவை என்பது உண்மை ஆனால் அத்தோடு அடிப்படை உரிமை என்ற விடயமும் இருக்கின்றது.  அவைதான் உணவு, உடை, உறையுள் அதுவும் எமக்கு தேவை, அதை கூட மூன்று தசாப்த கால யுத்தத்தினால் ஈழந்து நிற்கின்ற ஒரு சமூகமாகத்தான் எமது தமிழ் சமூகம்  காணப்படுகின்றது.
கிராமங்கள் தன்னிறைவு அடையவேண்டும், இன்று பலர்  அரசியலுக்காக சொல்லுகின்றார்கள், நிலம் பறிபோகிறது வளம் பறிபோகிறது என்று, அப்படியானால் அந்த நிலத்தையும் வளத்தையும் பாதுகாக்க என்ன வழி என்று கேட்டுப்பாருங்கள் அவர்களுக்கே அதற்கான வழி தெரியாது.
சிந்தித்துப் பாருங்கள் ஏன் பறிபோகின்றது என்று, எல்லை கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் அந்த கிராமங்களில் இல்லை. அவர்களுக்கு சரியான போக்குவரத்து இல்லை, சரியான சுகாதார வசதிகள் இல்லை, கல்வி வசதி இல்லை, மின்சார வசதி இல்லை, வீட்டு வசதி மற்றும் மலசல கூட வசதி இல்லை அப்படியானால் இவ்வளவு வசதிகளும் இல்லாமல் ஒரு எல்லை கிராம மக்கள் என்ன செய்வார்கள். அந்த எல்லைக் கிராமங்களை விட்டு நகரை நோக்கி அவர்கள் இடம் பெயர்வார்கள், அவர்கள் கிராமத்தில் இருந்து இடம்பெயரும் போது என்ன நடக்கும், அந்த எல்லைகளில் இருக்கும் நிலவளங்கள் பறிபோகத்தான் செய்யும்.
ஆகவே நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் பின்தங்கிய எல்லைக் கிராமங்களிலே வாழுகின்ற மக்கள் அந்த இடங்களிலே இருந்து இடம்பெயராதவாறு அவர்களுக்கு நல்ல போக்குவரத்து வசதி, நல்ல சுகாதார வசதி, நல்ல கல்வி வசதி, தொழில் சார்ந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறவேண்டிய அவசியம் வராது.
கிராமங்களை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் அனைத்து வசதி வாய்ப்புக்களையும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும், ஆகவே பல விமர்சனங்களையும் விசமத்தனங்களையும் தாண்டி கிராமங்களை நோக்கி அந்த மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை நாங்கள் செய்துவருகின்றோம்.
அதே போல் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் எம்மால் இயன்றளவு எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புற மக்களுக்காக பல்வேறுபட்ட உதவிகளை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.
மாவட்டத்தில் இருக்கின்ற பாரிய பிரச்சனைகளில் ஒன்றுதான் தொழில் இல்லா பிரச்சனை, அதற்காகவும் நாங்கள் தொழிற்சாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், அதனடிப்படையில் 8000 பேருக்கு தொழில் வழங்கக் கூடிய ஆடைக் கைத்தொழிற் பூங்காவை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவில் நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மாவட்டத்தில் நிலவும் வேலையில்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும் இதன்போது தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.