வங்கி கணக்குகளில் மோசடி செய்த பணத்தை இலங்கை வங்கி கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஒருவர் கைது

வெளிநாடுகளில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியாக கைப்பற்றி நாட்டில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி வைக்கும் குழுவின் அங்கத்தவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 14 கோடி ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், சாவக்கச்சேரி பகுதியில் 41 வயதான ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வங்கி கணக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மகளுக்கு 1 கோடியே 34 இலட்சத்து 23 ஆயிரத்து 297 ரூபா வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருக்கும் சிலரினால் அங்குள்ளவர்களின் வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக பிரவேசித்து இணைய வழி மூலம் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதாக பல முறைபாடுகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளன. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் இதுவரையில் 14 கோடி ரூபா இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன். இதில் ஒன்றாகவே இச்சம்பவம் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்படும் பணத்தை பெறுவோருக்கு ஒரு தொகை பணத்தை வழங்கிவிட்டு மிகுதி தொகையை மோசடிகாரர் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணத்தை தூய்மைப்படுத்தல் சட்டதிற்கு அமைவாக இது குற்றச்செயலாகும். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்