அரச திணைக்களமே பாதுகாக்க வேண்டிய வளங்களை அழித்து ஒரு குடியேற்றத்திட்டத்தை உருவாக்குவதற்கான முதற்படிகளை இங்கே மேற்கொள்வதாகத் தோணுகின்றது-சுமந்திரன்

அரச திணைக்களமே பாதுகாக்க வேண்டிய வளங்களை அழித்து ஒரு குடியேற்றத்திட்டத்தை உருவாக்குவதற்கான முதற்படிகளை இங்கே மேற்கொள்வதாகத் தோணுகின்றது. இதற்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதனை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு பிரதேசத்தில் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரையில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறித்த களவிஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்கள் தங்கள் வாழ்விடங்களில் மீள்குடியேற்றம் செய்ய முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் வனஇலாகா. மக்கள் வாழ்ந்த இடங்களையும் வனங்கள் என்று பிரகடணப்படுத்தி தற்போது எமது மக்கள் அங்கு செல்ல முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஆனால் இங்கு வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த வனங்கள், அந்தச் சட்டம் அப்படியே இருக்கத்தக்கதாக அதன் அதிகாரிகள் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கத்தின் இன்னுமெரு திணைக்களத்திற்கு அதனை அழிப்பற்கான அனுமதியைக் கொடுத்திருக்கின்றார்கள். அது சட்டபூர்வமாகக் கொடுக்கப்படவில்லை. சட்டவிரோதமாக நடைபெறுகின்ற இந்த விடயத்தைக் கண்டும் காணாமல் இருக்கதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது தெரிகின்றது.

பிரதேச செயலாளரிடம் இதனைப் பற்றிக் கேட்டால் தெரியாது என்று சொல்கின்றாராம். இவர்களிடத்தில் கேட்கும் போது தாங்கள் அனுமதி கேட்டிருக்கின்றோம். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்கின்றார்கள். எனவே அரச திணைக்களமே பாதுகாக்க வேண்டிய வளங்களை அழித்து ஒரு குடியேற்றத்திட்டத்தை உருவாக்குவதற்கான முதற்படிகளை இங்கே மேற்கொள்வதாகத் தோணுகின்றது.

2015ன் முன்னர் சிலர் இங்கு வந்து பயிர் செய்தர்கள். ஆனால் 2015ல் இருந்து அது முற்றாகத் தடுக்கப்பட்டது, வனஇலாகா அதிகாரிகள் அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்திருந்தார்களாம் என்ற சொல்லுகின்றார்கள். ஆனால் தற்போது வெறுமனே பிரஜைகள் அல்ல சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்குப் பிரித்துக் கொடுத்து மரமுந்திரிகைச் செய்கை இடம்பெறுகின்றது. மேய்ச்சற்தரைக்கு வருகின்ற மாடுகள் இவர்களால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலிகளிலே சிக்குண்டு இறக்கின்றன. ஆனால் அதைவிட முக்கியமாக ஒரு பாரிய குடியயேற்றத் திட்டமொன்ற ஆரம்பமாகியிருக்கின்றதென்பது இதலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

இதற்கெதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க முடியும். இதனை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.இசாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா, மண்முனை தென்ருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர், மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர், மண்முனை மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் மற்றும் உபதவிசாளர், போராதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.