“கிராமத்துடன் கலந்துரையாடல்” ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்…

“கோட்டாபய ராஜபக்ஷ முக்கியமல்ல, என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானதாகுமென்று நான் எப்போதும் கூறி வருகின்றேன். நாம் அதனையே பாதுகாக்க வேண்டும். எதிர்சக்திகள் முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களின் நோக்கம் இந்த கொள்கையை தோல்வியுறச் செய்வதாகும். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையே நான் நிறைவேற்றி வருகிறேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
தான் அதிகாரத்திற்கு வரும்போது வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம், கொவிட் நோய்த் தொற்றுக்கு மத்தியலும்கூட தேசிய பசுமைப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தனது பதவிக்காலத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போகுமானால் தன்மீது குற்றம் சுமத்துமாறு ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
(03) முற்பகல் வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவின் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” 17வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
தற்போது பேசுபொருளாக உள்ள விடயம் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி அவர்கள், நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனைக்குட்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொருத்தமானதல்ல என அண்மையில் கண்டறியப்பட்டிருப்பது இந்த பரிசீலனையின் பெறுபேறாகவே ஆகும். பரிசீலனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு நுகர்வு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தான் அதிகாரத்திற்கு வந்து குறுகிய காலப்பகுதியில் மேற்கொண்டுள்ள பணிகள் பற்றி விளக்கிய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடலுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திவந்த செம்பனை அல்லது முள்தேங்காய் பயிர்ச் செய்கையை முழுமையாக தடை செய்துள்ளதாக குறிப்பிட்டார். தேங்காய் எண்ணெய் நுகர்வில் சாதகமான பெறுபேறுகளை அறிந்து பாம் ஒயில் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. நாட்டினுள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதற்கான வழிகளும் மூடப்பட்டுள்ளன. சுற்றி வளைப்புகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை கைப்பற்றுவதற்கு முடிந்துள்ளது.
தான் அதிகாரத்திற்கு வரும்போது வெள்ளைவேன், முதலைகள், சுறா மீன்கள் பற்றி எல்லாம் போலிப் பிரச்சாரங்களை சமூகமயப்படுத்திய குழுக்கள் தமது போலிப் பிரச்சாரங்கள் வெற்றியளிக்காத நிலையில் தற்போது சுற்றாடல் பற்றி போலியான மற்றும் மோசமான கருத்துக்களை சமூகமயப்படுத்தி வருகின்றனர். நிறுவனமயப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்திற்கும் தனக்கும் எதிராக முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களை தோல்வியுறச் செய்து தன்னை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்த கொள்கையை பாதுகாக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
தமது பெற்றோர்களை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கின்ற காரணத்தினால் சில பிக்குகளுக்கு சாசனப் பணியை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. எனவே சாசனத்திற்காக பிள்ளைகளை வழங்கியுள்ள குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ் தொழில் ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் நீர் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் முன்வைத்த கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள், பல தசாப்தங்களாக இருந்துவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மாவட்டத்தின் சனத்தொகையில் 92 வீதமானவர்கள் குடிநீர்ப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். துரித கருத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் நீர்வழங்கல் முன்மொழிவு முறைக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் அனைத்து குழாய் கிணறுகளையும் புனரமைத்தல், பல சமூக நீர்த்திட்டங்களை ஆரம்பித்தல் ஆகியவற்றை உடனடி தீர்வாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டிடங்கள் மற்றும் கதிரை, மேசைகள் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினையாக மக்கள் சுட்டிக்காட்டினர். இது பற்றிய தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்களை பெற்று தேவைக்கேற்ப நிதி ஒதுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் கல்வி அமைச்சுக்கு பணிப்புரை வழங்கினார்.
“கிராமத்துடன் கலந்துரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகல், காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
வவுனியா நகரில் இருந்து 38 கிலோ மீற்றர் தூரத்தில் கிழக்கு மற்றும் தெற்கில் அனுராதபுர மாவட்டத்தின் பதவிய, கெப்பித்திகொல்லாவ பிரதேச செயலகப் பிரிவிற்கும் மேற்கில் நந்திமித்திர கிராமத்தையும் எல்லையாகக் கொண்டு வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவு அமைந்துள்ளது. போகஸ்வெவ 1, போகஸ்வெவ 2, கம்பிலிவெவ, வெடிவைத்தகல்லு, கோவில்புளியங்குளம் மற்றும் வெஹரதென்ன ஆகிய கிராமங்கள் இதில் அடங்குகின்றன. 478 குடும்பங்கள் வசிக்கின்ற வெடிவைத்தகல்லு கிராமத்தின் சனத்தொகை 1520 ஆகும். நெல், சேனைப் பயிர்ச் செய்கை இம்மக்களின் பிரதான வாழ்வாதாரமாகும்.
கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதற்காக போகஸ்வெவ கிராமத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அங்கிருந்து போகஸ்வெவ மகா வித்தியாலயம் வரையில் செல்லும் வீதியின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்களுடன் உரையாடி பிரதேசத்தின் தகவல்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார்.
மொபிடல் நிறுவனம் போகஸ்வெவ மகா வித்தியாலயத்திற்கும் நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கும் அன்பளிப்பாக வழங்கிய 02 மடிக் கனணிகள் மற்றும் டயலொக் நிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய தொலைக்காட்சி மற்றும் இணைப்பு ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் கையளித்தார்.
“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்துவது ஜனாதிபதி அவர்களின் மற்றொரு நோக்கமாகும். “அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை’ என்ற தலைப்பில் ஜனாதிபதி அவர்கள் பாடசாலைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடத் துறைகளில் 500 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
உரிமை இன்றி இதுவரை அரச காணிகளை பயன்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி அவர்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான 5 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பாடநெறிகளை பயில்வதற்காக ஜனாதிபதி அவர்களினால் 03 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
போகஸ்வெவ மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் 37 கிலோமீற்றர் வீதி மற்றும் பிரதேசத்தின் இரண்டு முக்கிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணி வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
போகஸ்வெவ கிராமத்தில் 16 குளங்கள், கிவுல் ஓய திட்டம் உள்ளிட்ட 17 குளங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
தொல்பொருள் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் கிராமத்தின் விகாரைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள கிராமங்களை பாதுகாப்பதற்காக மின்சார வேலிகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
போகஸ்வெவ ஆரம்ப சுகாதார மத்திய நிலையத்தை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டது.
பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர், தாதியர் மற்றும் ஏனைய ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
நீண்டகாலமாக இருந்துவரும் காணி உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை விரைவாக தீர்த்து, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கிராமவாசிகளுக்கு வசதிகளை செய்துகொடுப்பது பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வட மாகாண ஆளுநர் திருமதி. பீ.எஸ்.எம். சார்ல்ஸ், வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு பிரதானிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.