தேர்தல் முறையில் காணப்படும் குறைகளை இனங்காண விசேட குழு!

தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ்வின் பிரேரணையை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றம் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது சபை ஒத்திவைப்பு வேளையின்போது, சபை முதல்வரும அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பிரேரணையை சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையின் பிரகாரம், தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் காண்பதும் எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களை செயற்படுத்த அவசியமான திருத்தங்களை முன்மொழிவதும் இந்த குழுவின் கடைமையாகும்.

அத்துடன் இந்த குழுவின் தவிசாளரும் 15 பேர்களைக் கொண்ட குழு உறுப்பினர்களும் சபாநாயகரினால் நியமிக்கப்படுதல் வேண்டும். குறித்த குழு அதன் முதலாவது அறிக்கையை முதலாவது அமர்விற்கு பின்னர் ஆறுமாத காலங்களினுள் அல்லது நாடாளுமன்றத்தினால் நீடிக்கப்படும் காலப்பகுதியினுள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் காலத்துக்கு காலம் இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் கூடுவதற்கும் இந்த குழுவுக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும் என பிரேரணையில் தெரிவிக்கப்படுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.