இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி சிவஞானசோதி காலமானார்

மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரும், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், புனர்வாழ்வு அமைச்சின் முன்னாள்
செலளாளருமான வேலாயுதன் சிவஞானசோதி நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ
மனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 61.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரான சிவஞானசோதி
சுகவீனமுற்ற நிலையில் நேற்றுக் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் காலமானார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவரது அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி, வடக்குகிழக்கு புனரமைப்பு, இடம்பெயர்ந்த
மக்களின் மீள்குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளில் தீவிரமான அக்கறை காட்டியிருந்தார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (06) மாலை 05 மணி தொடக்கம் 07 மணி வரை பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாளை (07) காலை 09 மணி தொடக்கம் மாலை 07 மணி வரைக்கும் அதே மலர்ச்சாலையில் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை காலை 09 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையின் விசேட விருந்தினர் பிரிவில் வேலாயுதன் சிவஞானசோதியின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

வியாழக்கிழமை மாலை 04 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

1959 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பில் பிறந்த வேலாயுதன் சிவஞானசோதி, யாழ். இந்துக் கல்லூரி, புனித ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறை பட்டதாரியான வேலாயுதன் சிவஞானசோதி, தனது MSC பட்டபடிப்பை பிரித்தானியாவிலுள்ள BRADFORD பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான வேலாயுதன் சிவஞானசோதி, அமைச்சரவை அந்தஸ்துள்ள பல அமைச்சுக்களின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்