போதைப்பொருள்கொள்வனவுக்கு வீடுகளை உடைத்து சேவல் , தங்க ஆபரணங்களை கொள்ளை ;06 இளைஞர்கள் கைது

மட்டக்களப்பில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய இளைஞர் குழுவொன்று, போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்காக, வீடுகளை உடைத்து சேவல் தொடக்கம் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான செயலில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள், நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து ஹரோய்ன் போதைப்பொருள் மற்றும் கொள்ளையிட்ட சேவல், மரங்கள் வெட்டும் இயந்திரம், மாபிள் வெட்டும் இயந்திரம், அலைபேசிகள் மற்றும் பென்ரைவர் உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் வீடுகள் உடைத்து கொள்ளைகள் இடம்பெற்றுவருகின்றதுடன், போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸ் குழுவொன்று, தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்தே, நாவற்கேணி, இருதயபுரம் மற்றும் ஊறணி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 18, 21, 19, 20, 24 வயதுகளையுடைய இஞைனர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் நால்வர் ஹரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இருவர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், போதைப்பொருள் பாவனைக்காக திருடப்பட்ட பொருட்களை விற்று, தினமும் 2,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களான இளைஞர்கள், போதைபொருளை பாவித்துவிட்டு, வீதிகளில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர் எனவும் போதைப்பொருள் மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகளுடன், இந்த 6 இளைஞர்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவர்களாக உள்ளனர் எனவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மீட்கப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.