யாழ் மாநகர முதல்வர் கைது நடவடிக்கை; தமிழரின் சுயநிர்ணய உரிமைமீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் உச்சகட்டம் – ரவிகரன்

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது நடவடிக்கையானது, தனித்தே மணிவண்ணன்மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையின் உச்சக்கட்டமல்ல, மாறாக தமிழ் இனத்தின்மீதும் தமிழ்த்தேசிய உணர்வின்மீதும், தமிழரின் சுயநிர்ணய உரிமைமீதும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் உச்சம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரத்தின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதையும், வெற்றிலை எச்சில் துப்புவதையும் தடை செய்வதற்காக முதல்வர் மணிவண்ணன் அண்மையில் யாழ். மாநகர காவல்படை ஒன்றை உருவாக்கியிருந்தார்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட யாழ் மாநகரக் காவல்படைக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்ததான சீருடையை வழங்கியமை குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக முதல்வர் மணிவண்ணன் யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்துக்கு 08.04.2021 அழைக்கப்பட்டார்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட முதல்வர் மணிவண்ணன், விசாரணைகளின் பின் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான, விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

இந் நிலையில் இந்த கைதுநடவடிக்கை தொடர்பில் ரவிகரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாமதமின்றி விடுதலைசெய்யப்படவேண்டும்.

நிர்வாகத் திறன் என்பது தமிழர்களிடம் மிக அதிகம். ஒரு மாநகர முதல்வர் தனது பகுதியில் சுத்தம்பேணி மக்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைதான் இது.

இதை ஒத்த சீருடை வேறு சபைகளிலும் இருப்பதாக தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனைவிட இலங்கையைத் தாண்டி பல்வேறு நாடுகளிலும் நீல மற்றும் இள நீல வண்ண ஆடைகளில் காவல் சேவையினர் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம்என்ற காரணத்துடன் யாழ் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்த நடவடிக்கையானது தனித்தே மணிவண்ணன்மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையின் உச்சக்கட்டமல்ல, மாறாக தமிழ் இனத்தின்மீது தமிழ்த்தேசிய உணர்வின்மீது, தமிழர் சுயநிர்ணய உரிமைமீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் உச்சமாகும்.

தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைமீதான இலங்கை அரசின்அடக்குமுறைகளுக்கு இந்தியா உள்ளிட்ட பன்நாடுகள் வலுவான எதிர்ப்பினைக்காட்டவேண்டும் எனத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.