புதிய அரசியலமைப்பில் உட்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரி சிவசேன அமைப்பினரால் 18 ஆலயங்களில் அடையாள உண்ணாவிரதம்

[வி.சுகிர்தகுமார் ]

  மதமாற்ற தடைச்சட்டத்தை இயற்றி புதிய அரசியலமைப்பில் உட்படுத்துமாறும் பசுவதையினை உடன் நிறுத்துமாறும் சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரி சிவசேன அமைப்பினரால் 18 ஆலயங்களில் அடையாள உண்ணாவிரதம் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை முதல் ஆரம்பமான குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் சிவசேன அமைப்பின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ரி.ஜெயாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தவத்திரு விபுலானந்தா அடிகளாரின் 119 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவசேன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள உண்ணாவிரத நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்பின் உறுப்பினர்கள் பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் பிற்பாடு அடையாள உண்ணாவிரத நிகழ்வின் நோக்கம் பற்றி பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மதத்தினை மதிக்கும் பக்குவம் கொண்டவர். அவர் மீது பூரண நம்பிக்கையும் எமக்குள்ளது. ஆகவே அவரது காலத்தில் மதமாற்ற சட்டத்தை உருவாக்கி இந்து மதத்தை மாத்திரமன்றி அனைத்து மதங்களின் உரிமையினையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

எல்லா மதங்களும் ஒருமித்து வாழும் எமது நாட்டில் சில மதத்தவர் மக்களிடம் உள்ள ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார நிலையினை காரணம் காட்டி அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். இது தவறான செயற்பாடாகும். ஆகவே எமது நாட்டிற்கு மதமாற்றத்தடைச்சட்டம் அவசியமானதொன்றாக கருதப்படுவதுடன் எதிர்காலத்தில் ஜனாதிபதியின் கரத்தால் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

ஒரு தாக்கத்திற்கு எதிர்தாக்கம் உள்ளது என்பது சமய ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுபோலவே மதமாற்றத்தை செய்கின்றவர்களும் மதமாற்றத்திற்கு உள்ளாகின்றவர்களும்  எதிர்தாக்கத்தை அனுபவிப்பர் என்பது உண்மை. இந்நிலையில் மதமாற்ற தடைச்சட்டத்தை ஜனாதிபதி அவர்கள் முன்வைப்பாரானால் அதனை இந்துமக்களாகிய நாங்கள் முழு மனத்துடன் ஏற்றுக்கொள்வோம் என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.