வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு இராஜாங்க அமைச்சர் விதுர நேரில் விஜயம்

வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

புத்தாண்டின் பின்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது இந்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முல்லைத்தீவு குருந்தூர் மலையை அண்மித்து 400 ஏக்கர் பகுதியை தொல்பொருள் செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளையும் நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற தொல்பொருள் அகழ்வாராச்சியின்போது வடக்கு கிழக்கில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு குருந்தூர் மலையை அண்மித்து 400ஏக்கர் காணியை கைப்பற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களால் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அத்துடன் ஆரம்பத்தில் 72 ஏக்கரே அப்பகுதியில் காணப்பட்டதென்றும் 400ஏக்கரைப் பெற்றுக்கொள்ளுதல் பொருத்தமற்ற செயலாகும் என்றும் எடுத்துக் கூறப்பட்டது.

இதனையடுத்து இராஜாங்க அமைச்சரும் அதிகாரிகளும் 400 ஏக்கரைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தப்படுவதாக அறிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயத்தில் தொல்பொருள் அகழ்வாரச்சி தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டது. அதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் குறித்த கோவிலின் உள்ளே தொல்பொருள் சான்றுகள் இருபதகாவும் அதனை ஆராய்ச்சி உட்படுத்தாது போய்விட்டால் சான்றாதரங்கள் அழிந்து விடும் என்றும் கூறியிருக்கின்றார்.

எனினும், அந்த ஆலயத்தின் வரலாற்றுக் காலத்தது விடயங்களையும் முன்வைத்ததோடு இராஜங்க அமைச்சர் அங்கு நேரடியாக விஜயம் செய்தால் நிலைமைகளை உணரமுடியும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவரும் சமிக்ஞையொன்றைக் காட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆலயம் தொடர்பில் பேசப்பட்டது.

அதுதொடர்பில் நீதிமன்றம் இடைகால தடை உத்தரவுகளை விதித்துள்ள நிலையில் எதிர்வரும் சித்திரைப் பௌர்ணமி தினத்திற்கு பூஜை வழிபாடுகளில் ஈடடுபடுவதற்கான அனுமதி கோரப்பட்டது. நீதிமன்ற வழக்கு உள்ளமையால் அதிகாரிகள் தரப்பில் எவ்விதமான உத்தரவாதங்களும் வழங்கப்படவில்லை.

எனினும் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்ய வேண்டும் . அதன் ஊடாக நிலைமைகளை உணர்ந்து கொள்ளமுடியும் என்றும் எடுத்துரைக்கப்படவும் இராஜாங்க அமைசச்ர் அதற்கு உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நிலாவரைக்கிணறு சம்பந்தமாகவும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதோடு முன்அனுமதி பெறாது தொல்லியல் துறை அதிகாரிகளின்; பிரவேசங்களை நிறுத்துவதன் ஊடாக முரண்பாடுகளை குறைக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.