யாழில் சகோதரர்கள் இருவர் பயணித்த துவிச்சக்கர வண்டி விபத்து: 8 வயது சிறுவன் உயிரிழப்பு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வடி வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று (புதன்கிழமை) காலை நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசிகன் (வயது-8) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மூத்த சகோதரனான 12 வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூத்த சகோதரன் துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றுள்ளார். பின்னிருக்கையிலிருந்த இளைய சகோதரரன் வீதியின் பக்கம் வீழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடி வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சாரதியை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்