யாழ். மாவட்டத்தில், பி சிஆர் பரிசோதனையை இரு மடங்காக அதிகரிக்கப்படும்’

 

யாழ். மாவட்டத்தில், பிசிஆர் பரிசோதனையை, திங்கட்கிழமையில் (10) இருந்து இரு மடங்காக அதிகரிப்பதற்காக  ஆலோசித்திருப்பதாகத் தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ( திட்டமிடல் பிரிவு ) வைத்தியர் ச.ஸ்ரீதரன்,

அதுபோல எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளும் அந்த நாளோ அல்லது அடுத்த ஒரு நாளிலோ வெளியிடக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

 

வடமாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ( திட்டமிடல் பிரிவு ) வைத்தியர் ச.ஸ்ரீதரன், மாவட்டச் செயலகத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இன்றைய தினம் (நேற்று முன்தினம் ) வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததாகவும் தற்போதைய கொரோனா  முன்னேற்பாடுகள் தொடர்பில்  ஆராய்ந்ததாகவும் கூறினார்.

அத்துடன், யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியை சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர்,  பின்னர் கோப்பாய் கொரோனா  சிகிச்சை நிலையத்துக்குச் சென்று அங்குள்ள நோயாளிகள் எதிர்கொள்ளும்  பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வை  வழங்கியதாகவும் கூறினார்.

தற்போது, கொரோனா வைரஸ் பரவல் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், யாழ். மாவட்டத்திலேயே கிட்டத்தட்ட 1000 கட்டில்களுடன் கூடிய  சிகிச்சை நிலையமொன்றை ​அமைப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதேபோல கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு மருத்துவ சிகிச்சை வழங்குவது அதாவது சத்திர சிகிச்சை மேற்கொள்வது தொடர்பிலும் ஆராய்ந்ததாகவும் கூறினார்.

அத்துடன்,  முடக்கல் நிலை என்பது, இராணுவத்தினராலும் சுகாதாரப் பணியாளர்களாலும்  தீர்மானிக்கப்படுவது அல்ல எனவும் மாறாக மக்கள்தான் தீர்மானிக்கின்றனர் எனவும், வைத்தியர் ச.ஸ்ரீதரன் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்