சமநிலைச் சமுதாயமாய் தற்போதைய இடர் காலத்தின் பொறுப்புகளை உணர்ந்தவர்களாய் நாம் ஒவ்வொரு பிரஜையும் செயற்படுதல் வேண்டும்…

மாளிகைக்காடு நிருபர் நூருல் ஹுதா உமர்

கொரோனா பெரும் தொற்று உக்கிரமாகி நாளுக்கு நாள் உலகளாவிய ரீதியிலும், நமது நாட்டிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கமைய இக்கொடும் தொற்று தொடர்பில் நாம் அனைவரும் அவதானத்துடனும்,விழிப்புணர்வுடனும் செயற்படுவது என்றென்றும் நினைவில் நிறுத்த வேண்டிய விடயமாகும் என அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கண்ணுக்குத் தெரியாத இக்கொடிய வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக வல்லரசு நாடுகளே திகைத்து நிற்கும்  இவ்வேளையில் அபிவிருத்தி அடைந்து வரும் நமது நாடும் இக்கொரோனா தொற்றினை முற்று முழுதாக ஒழிக்க சதா போராடி வருகிறது. கோவிட் 19 தொடர்பில் அரச இயந்திரம் முன்னெடுக்கும் காத்திரமான பணிகளுக்கு, மக்களுக்கு வினைத்திறன்மிக்கதும் காலப்பொருத்தப்பாடு மிக்கதுமான சேவைகளை வழங்கும் அதிகாரம் பொருந்திய உள்ளூராட்சி மன்றம் எனும் அடிப்படையில் அக்கரைப்பற்று மாநகர சபையானது முழு ஒத்துழைப்பினை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டில் அக்கரைப்பற்று பல நாட்களாக தனிமைப்படுத்தபட்ட போது அக் கடினமான காலத்தினை எமது மக்கள் விழிப்புணர்வுடனும், பொறுமையுடனும், பல்வேறு போராட்டங்களுடனும் கடந்து வந்தமை இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.

ஒரு பொறுப்புமிக்க முதல்வராக அக்கடின காலத்தின் அர்ப்பணிப்புகளையும்,வலிகளையும், வடுக்களையும் நான் நன்கு அறிவேன். அக்கரைப்பற்று மக்கள் துயரம் தோய்ந்த அச்சூழலை மிக நிதானமாக, சமயோசிதமாக வெற்றி கொண்டார்கள் என்பதில் நான் மிகுந்த பெருமிதம் அடைகிறேன். சமகாலத்தில் சர்வதேச பேரிடராக பிரகடனப்படுத்தபட்டிருக்கும் இத்தொற்றின் வீரியம் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தொற்றை கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார கட்டமைப்புகள் பல்வேறு பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டாலும், அவற்றுக்கான முழுப்பலன் இன்னும் கிட்டவில்லை என்பது வேதனையான செய்தியாகும்.

வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டுவதே அறிவார்ந்த செயல் எனப்படுகிறது. புனித ரமழான் மாதம் நிறைவடையும் தருணம் இது. நாம் பெருநாளை பெருமிதமாய் கொண்டாட எதிர்பார்த்த காலமாயினும் நிகழும் நிலைவரங்கள் நமக்கு அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாயில்லை. கிழக்கில் மீண்டும் கொடிய கொரோனா தலை தூக்க ஆரம்பித்து விட்டது. நாட்டில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும், தொற்றின் காரணமாக ஏற்படும் மரண விகிதத்திலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
எனவே, கொரோனா குறித்து மீண்டும் நாம் அதிகபட்சமான விழிப்புணர்வு கொள்ள வேண்டியது அவசரமானதும், அவசியமானதும் ஆகும். நமது மாநகர மக்களை அன்றாட வியாபார நடவடிக்கைகள், இதர நடவடிக்கைகளின் போது உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தயவாக கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் வீடுகளில் இருந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதுடன், இதர வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டி உங்களை கோருகிறேன். சாந்தி, சமாதானம், ஐக்கியம் மற்றும் மானுட நேயத்தை போதிக்கும் நமது மார்க்கமானது யாருக்கும் இடையூறு இல்லாது தேசத்தின் சட்ட விழுமியங்களை பேணுமாறும் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. அந்தவகையில், சமநிலைச் சமுதாயமாய்  தற்போதைய இடர் காலத்தின் பொறுப்புகளை உணர்ந்தவர்களாய் நாம் ஒவ்வொரு பிரஜையும் செயற்படுதல் வேண்டும். கொரோனா வெற்றி கொள்ளக்கூடிய நோய், அவதானமின்றி நாம் தொற்றுக் காவிகளாக திரியாத வரை. ஆகவே, பாதுகாப்பாய் வீட்டில் இருப்போம். சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்து பேணுவோம் என முதல்வரின் விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.