அம்பாரை மாவட்டத்தில் இதுவரை 804 தொற்றாளர்கள்- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இறுக்கமான முறையில்…

வி.சுகிர்தகுமார்

  அரசாங்கத்தினால் நேற்று நள்ளிரவு 11 மணி தொடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பயணக்காட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அம்பாரை மாவட்டத்திலும் மக்களால் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இறுக்கமான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மத்திய சந்தை பகுதி உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது.

ஓரிரு மருந்தகங்களை தவிர்ந்த அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய வியாபார நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

இதேநேரம் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதையும் வெளியே நடமாடுகின்றவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்வதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியேறுவதை முற்றாக தவிர்த்து அரசுக்கும் சுகாதாரதுறைக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் காண முடிந்தது.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் இதுவரை 804 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் கல்முனை பிராந்தியத்தில் 61 தொற்றாளர்கள் மாத்திரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒப்பிடுகின்றபோது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையிலான பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினரின் செயற்பாடுகள் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலாளர்களின் விழிப்பூட்டல் நடவடிக்கை, பாதுகாப்பு தரப்பினருடைய முழுமையான பங்களிப்பு மக்களின் பூரண ஒத்துழைப்பு போன்ற காரணிகளால் கொவிட் தொற்று கல்முனை பிராந்தியத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் முஸ்லிம் மக்களும் பயணக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைதியான முறையில் வீடுகளில் இருந்தவாறு தங்களது பெருநாள் தொழுகை மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை வரவேற்கத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.