ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை; கொவிட் – 19 அசாதராண சூழ்நிலையால் ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு

(விஜயரத்தினம் சரவணன்)

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 17.05.2021 இன்றையநாளுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் தவணையிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் கொவிட் -19 ஆசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு நீதிமன்றால் குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு குறித்த வழக்கின் விசாரணைகள் திகதியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் வடமாகாணசபை  உறுப்பினர் து.ரவிகரன் 28.02.2018அன்று முல்லைத்தீவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

அதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர்இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறாக நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள்  கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், 17.05.2021 இன்றைய நாளுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இதுதொடர்பான வழக்குவிசாரணை தவணையிடப்பட்டிருந்தது.

இன்றைய வழக்கு விசாரணைகளுக்காக நில அளவைத் திணைக்களத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டோர் சார்பில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், அ.பீற்றர் இளஞ்செழியன், அ.சண்முகலிங்கம் ஆகிய நால்வரும் நீதிமன்றிற்கு வருகைதந்திருந்தனர்.

இந் நிலையில் 17.05.2021 இன்றைய நாளுக்காக தவணையிடப்பட்டிருந்த குறித்த வழக்கின் விசாரணைகள் தற்போதய கொவிட் -19 அசாதாரண நிலையினைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் 12.10.2021 அன்றைய நாளுக்கு இந்த வழக்கின் விசாரணைகள் தவணை இடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.