ஹப்புத்தளை கல்கந்த பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளது
(க.கிஷாந்தன்)
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை கல்கந்த கிராம சேவையாளர் பிரிவின் சில மலைப்பாங்கான இடங்களில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றது.
அத்துடன் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், அப்புத்தளை பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பில் இன்று (23) ஹப்புத்தளை பிரதேச சபையின் தவிசாளர் கந்தசாமி கண்ணா மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது சில கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாகவும் இதனால் எவருக்கும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இப்பகுதியில் 60 பேர் வரை வசித்து வருகின்றனர்.
மேலும், ஹப்புத்தளை – கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போர் அவதானதத்துடன் செயற்படுமாறு அப்புத்தளை பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.
எனினும் அனர்த்தங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊவா மகாணத்தின் பல பகுதிகளில் மழைப் பெய்து வருகின்றது.
பதுளை மாவட்டத்தின் ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ, லக்கம, பல்லேகம, ரிவஸ்டன் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்துக்களேதுமில்லை