விடுதலைப்புலிகள் வலுவடைய சிங்களவர்களே காரணம்!!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக, ஸ்ரீலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கருப்பு ஜுலை கலவரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மேலும் வலுவடைந்ததாகவும், அத்தகைய தீவிரவாத இயக்கமொன்று எழுச்சியடைவதற்கான காரணம் சிங்களவர்களே தவிர தமிழர்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

எமது நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான சட்டம் மற்றும் அதனூடாக ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகம் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணங்கிக்கொள்ளப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் கீழான முன்னேற்றகரமான விடயங்களாகும்.

எனினும் தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அஞ்சி, அந்தச் சட்டத்தை இல்லாமல்செய்வதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நிதியமைச்சின் ஊடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கான நிதிவழங்கல் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே அவ்வலுவலகம் இருந்தும் இல்லாத நிலையை அடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விருப்பம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குக் காணப்பட்டபோதிலும், அக்காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ச தரப்புடன் நெருங்கிச்செயற்பட்டதன் காரணமாக அந்நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்தன.

ஆரம்பகாலத்தில் தமிழர்கள் தமது மொழியைப் பேசுவதற்கான உரிமையை மாத்திரமே கேட்டார்களே தவிர, அவர்கள் தனியொரு நாட்டைக் கோரவில்லை. அவ்வாறு ‘பெடரல்’ கோரிக்கையை முன்வைப்பதைக்கூட பிழையென்று நான் கருதவில்லை.

ஆனால் மொழி உரிமை உரியவாறு வழங்கப்படாத நிலையிலேயே, அவர்கள் தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைத்தார்கள். கருப்பு ஜுலை கலவரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மேலும் வலுவடைந்தது.

எனவே அத்தகைய தீவிரவாத இயக்கமொன்று எழுச்சியடைவதற்கான காரணம் சிங்களவர்களாகிய நாம்தானே தவிர தமிழர்களல்ல. இலங்கை மாத்திரமன்றி உலகின் எந்தவொரு நாட்டிலும் தீவிரவாதத்தின் மூலம் தீவிரவாதமே வலுவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.