சிங்கள ஆதிக்கம் நிலை நாட்டப்படும் வட்டுவாகல்! ரவிகரன் குற்றச்சாட்டு

சிங்கள ஆதிக்கம் நிலை நாட்டப்படும் வட்டுவாகல்!
ரவிகரன் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் சிங்கள அரசாங்கத்தின் சில திணைக்களங்களாலும், படையினராலும் அபகரிக்கப் பட்டுள்ளன என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வட்டுவாகல் விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முல்லைத்தீவின் வட்டுவாகலை அண்மித்த பகுதிகளில், 617 ஏக்கர் காணிகளில் கடற்படையும், 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் இராணுவமும் இருப்பதோடு மட்டுமல்லாமல், பெரிய விகாரை ஒன்றையும் அமைத்து, சிங்கள ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றனர்.

அதே நேரம் வட்டுவாகல் நந்திக் கடலும், நந்திக் கடல் சேர்ந்த பகுதிகளையும் உள்ளடக்கி கடந்த 2017ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு, வன ஜீவராசிகள் திணைக்களம் கிட்டத்தட்ட 10230 ஏக்கர் நிலப்பரப்பை தங்களுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்திருக்கிறது.

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகள் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களுக்கும், வட்டுவாகல் மக்களுக்கும் உரிய காணிகளே. மேலும் கிட்டத்தட்ட 378 ஏக்கர் தனியார் காணியும், 291 ஏக்கர் காணி அரச காணி கட்டளை சட்டத்தின்படி, அனுமதிப் பத்திரங்கள் ஏற்கனவே மக்களுக்கு வழங்கப்பட்டு, மக்கள் பயிர் செய்கைகளும், குடியிருப்புகளுமாக வாழ்ந்து வந்த இடம் தான் இந்த இடம்.

அவ்வாறான இடத்தில் யுத்த காலத்தால் வெளியேறியதன் பின்பு 2009ஆம் ஆண்டு மீண்டும் குடியேற்றப்பட்ட போது இந்த இடத்தில் கடற்படை அபகரித்து வைத்திருப்பதால் மக்கள் அங்கு செல்லமுடியவில்லை. அந்த வகையில் 670 ஏக்கர் காணியில் மொத்தம் 617 ஏக்கர் காணியை கடற்படை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

இந்நிலையில், வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்கான காணி அளவீட்டிற்காக கடந்த 29ஆம் திகதி நிலஅளவைத் திணைக்களத்தினர், சென்றவேளை, அவர்களை வழி மறித்து மக்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து, போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.