ஒலிம்பிக்கில் எமது நாடு பதக்கம் பெறவில்லை. விளையாட்டுத்துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன ? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்.

எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்களா ? கலந்துகொள்ளும்போது அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா ? என்று எதிர்பார்க்கும்போது, இலங்கையைவிட மிகச்சிறிய பல நாடுகள் பதக்கங்களை பெற்றுள்ளது.

இதில் விளையாட்டு வீரர்களை மட்டும் குறை கூற முடியாது. மாறாக உத்தியோகத்தர்களை நியமிப்பதில் அரசாங்க Requirement Criteria வில் உள்ள குறைபாடுகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், நிருவாகிகள் மற்றும் பெற்றார்கள் என அனைத்து தரப்பினரும் இதற்கு பொறுப்புகூற வேண்டும்.

அத்துடன் மாவட்ட, மாகாண, தேசிய போட்டிகளில் நாட்டுக்கு சிறந்த வீரர்களை தெரிவுசெய்ய வேண்டுமென்ற பொதுநோக்கு இல்லை, மாறாக தனது மாணவர்கள், உறவுக்காரர்கள், சங்கம், கழகம், இனம், பிரதேசம் போன்றவற்றில் உள்ளவர்கள் வெற்றிபெற்றால் போதும் என்றும், அவ்வாறானவர்களின் வெற்றிக்காக குறுக்குவழிகளில் முயற்சிக்கும் மனோநிலையும் காணப்படுகின்றது.

இதனால் மிகத்திறமையான வீரர்கள் ஓரம்கட்டப்பட்டு பின்பு மன உளைச்சல் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும் விளையாட்டிலிருந்து ஒதுங்கிக்கொண்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளது.

ஒலிம்பிக் தரத்துக்கு விளையாட்டை அபிவிருத்தி செய்வதென்றால் நீண்டதூர பயிற்சி அடிப்படையில் Long Term Athlete Development Strategy யானது பாடசாலை பருவத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதில் Talent Identification முக்கியமானது.

பெரும்பாலான பாடசாலைகளில் தான் சார்ந்த விளையாட்டில் நிபுனர்த்துவம் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் இல்லை. இதற்கு ஆசிரியர்களுக்கு கற்பிக்கின்ற கல்விக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணமாகும். ஆசிரியர் பயிற்சி கல்விக் கல்லூரிகள் மறுசீரமைப்பு செய்யப்படல் வேண்டும்.

பெரும்பாலான பாடசாலைகளில் விளையாட்டு ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவதில்லை. சிலர் அதிபர்களுக்கு எடுபிடிகளாகவும், சிலர் களத்தில் நின்று வியர்வை வராமலும், அழுக்கு படாமலும் சுகாதாரம் அல்லது வேறு பாடங்களை படிப்பிக்கின்றார்கள்.

ஆனால் முறையான பயிற்சிகள் இல்லாமல் மாணவர்கள் சுயமாகவே விளையாடுவதனை பல இடங்களில் காண்கின்றோம். அவர்களது ஆர்வக்கோளாறு காரணமாக முறையற்ற பயிற்சியினால் முன்னேற்றம் (Performance) தடைப்படுகிறது. ஒருசில திறமையான ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களுக்கு நிருவாக ஒத்துழைப்புக்கள் மற்றும் வளங்கள் கிடைப்பதில்லை.

இதற்கு ஆசிரியர்களை மட்டும் குறைகூற முடியாது. ஆசிரியர்களை கண்காணிக்கின்ற அதிபர்களே இதற்கு முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.

அத்துடன் அரச நிதியிலிருந்து மைதான கட்டுமானங்களையும், விளையாட்டு உபகரணங்களையும் பெறுவதென்றால் அரசியல்வாதிகளுக்கு மாலை, முதல் மரியாதை, மேள தாளம், கும்பிடுபோட்டு ஆராத்தி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதியை பெற முடியாது. இதிலேயே விளையாட்டு கழகங்களின் ஆயுள் கடந்து செல்கிறது.

அண்மையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் சுமார் நாலாயிரம் (4,000) “விளையாட்டு பயிற்றுனர்கள்” அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விளையாட்டு பயிற்றுவிக்கும் பொறுப்புக்கள் இதுவரை வழங்கப்படவில்லை. மாறாக அதிபர்களுக்கு எடுபிடிகளாகவும், காரியாலய வேலைகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்கள் பயிற்சி வழங்குவதற்கு முயற்சித்தாலும், அதனை ஏற்கனவே அங்கு இருக்கின்ற விளையாட்டு ஆசிரியர்களினால் தடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு விளையாட்டுக்களுக்கும் தேசிய சம்மேளனங்கள் உள்ளன. அதில் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களும், விளையாட்டு விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்றவர்களும், ஆய்வாளர்களும் உள்ளனர். அவ்வாறான பயிற்றுவிப்பாளர்களை பாடசாலைகளில் பயிற்சி வழங்குவதற்கு அனுமதிப்பதில்லை. இந்த நிலைமை அதிகமான கிழக்குமாகாண முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படுகின்றது.

விளையாட்டு பயிற்சியாளர்களை அல்லது போதனாசிரியர்களை நியமிப்பதில் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற சட்டங்களில் மிக பலயீனம் உள்ளது. அதாவது பாடசாலைகள், விளையாட்டு திணைக்களம், பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் போன்றவற்றில் பணிபுரிகின்ற விளையாட்டு பயிற்சியாசிரியர்களைவிட மிக திறமையானவர்கள் நியமனம் கிடைக்காமல் வெளியே உள்ளார்கள். அதாவது தேசிய சம்மேளனங்களில் உள்ளார்கள்.

அரசாங்க Requirement Criteria வில் உள்ள குறைபாடுகள் என்னும்போது தனது வாழ்வாதாரத்துக்கு தொழில் ஒன்று எப்படி எடுக்கலாம் என்று Criteria க்கு ஏற்ப சான்றிதழ்களை காண்பித்து நேர்முக பரீட்சையில் அதிகாரிகளை ஏமாற்றி அல்லது அரசியல் செல்வாக்கு மூலமாக தொழிலை பெற்றுக் கொள்கின்றார்கள்.

பின்பு அந்த தொழிலில் அவர்களால் பிரகாசிக்க முடிவதில்லை. அதாவது விஞ்ஞானரீதியில் (Sports Science) உயர்தரத்தில் பருவகாலத்துக்கு ஏற்ப (Periodization) பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கமுடியாது. இதனால் ஏமாற்றம் அடைவது மாணவர்கள் மட்டுமல்ல, நாட்டின் விளையாட்டுதுறையாகும்.

பாடசாலை ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் பாடசாலையைவிட்டு வெளியேறுகின்றபோது அவர்களை விளையாட்டு உத்தியோகத்தர்களும், பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றவர்களை பல்கலைக்கழக விளையாட்டு போதனாசிரியர்களும் பொறுப்பேற்று பயிற்சியை தொடர வேண்டும்.

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் உள்ள ஒன்பது விளையாட்டு அபிவிருத்தி திணைக்களங்கள் உள்ளன. இதன்கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கு விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். அவர்களது கடமை வருடாந்த பிரதேசமட்ட விளையாட்டு போட்டிகளை நடாத்துவது மட்டுமல்ல. வீரர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். அவ்வாறு பயிற்சி வழங்கும் ஆற்றல் எத்தனைபேர்களுக்கு உள்ளது என்பது கேள்விக்குறியாகும்.

அத்துடன் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற நாடுகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பிரகாசிப்பதில்லை. இதில் இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் விதிவிலக்காகும். இவ்விருநாடுகளும் அனைத்து விளையாட்டுக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குகின்றது.

எமது நாட்டில் கிரிக்கட் விளையாட்டுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இதற்காக ஏராளமான நிதி பெறப்படுகின்றது. ஆனால் கிரிக்கட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை. இத்தனைக்கும் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலில் அங்கத்துவம் வகிக்கின்ற பன்னிரெண்டு (12) நாடுகளில் எமது நாடு பிரகாசிப்பது ஒரு சாதனையல்ல.

எனவே பாடசாலைகள், விளையாட்டு திணைக்களங்கள், ஆசியர் பயிற்சி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் விளையாட்டு பயிற்சி வழங்குகின்ற உத்தியோகத்தர்கள் தங்களை ஒவ்வொரு வருடமும் மேம்மபடுத்திக்கொள்ள வேண்டும் (Update) இதனை அரச அதிகாரிகள் கண்காணிப்பதுடன், விளையாட்டு வீரர்களின் நலன்களில் கவனம் செலுத்தி கண்கானிக்கின்றபோதுதான் விளையாட்டுத்துறையை ஒலிம்பிக் தரத்துக்கு அபிவிருத்திசெய்ய முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.