மக்கள் சுகாதார துறைக்கு ஒத்துழைத்து தற்பாதுகாப்புடன் நடந்தால் கொரோனா மரணத்தை பூச்சியமாக்கலாம் : மாநகர சபை உறுப்பினர் ச.ராஜன்.

நாட்டில் தினம் தினம் மரண எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த சுகாதார துறையினரும், பாதுகாப்பு படையினரும் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துவருவது பாராட்டத்தக்கது. பொதுமக்கள் மூட நம்பிக்கைகளையும், பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் நம்பி தடுப்பூசிகளை போடாமல் தவிர்து வருவது ஆபத்தான ஒன்றாகும். எம்மை நாம் பாதுகாக்க தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது அவசியமாகுமென கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் மட்டுப்படுத்த வளங்களுடன் கடந்த பல மாதங்களாக சுகாதாரப் பணியினர் ஆற்றி வருகின்ற பணி அளப்பரியது. அவர்களை கௌரவப்படுத்த வேண்டியது மனிதம் நிறைந்தோரின் கடமை. விதண்டாவாத கருத்துக்களை புறந்தள்ளி உடனடியாக 30 வயத்திற்கு மேற்பட்ட சகலரும் தமது பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று ஊசிகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு. சுகுணன் இன்னும் சில வாரங்களில் கொரோனா மரணங்களை பூச்சியமாக்கலாம் என்ற நம்பிக்கையை மக்களை நம்பியே முன்னிறுத்தியுள்ளார். சுகாதார தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் அதனை சாத்தியமாக்கலாம் என நம்புகிறேன் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்