தமிழ்த் தேசியத்தை வாழ்வித்த பெருந்தலைவர் அமரர் சி.மூ.இராசமாணிக்கம்.

பல இன, மத, மொழி, பண்பாடுகளைக் கொண்ட நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பு கூட்டாட்சி (சமஷ்டி) என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. இந்த அடிப்படையிலே தான் இலங்கையின் அரசிலமைப்பு இருக்க வேண்டும் என தந்தை செல்வா சொன்னார். நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒரு பிரதேசத்தை இன்னுமொரு பிரதேசம் சுரண்டாதிருத்தல் என்ற விழுமியங்கள் பேணப்படும். ஒட்டுமொத்த நாடும் முன்னேற்றமடையவும், நாட்டில் தேசிய உணர்வு செழிப்படையவும் இதுவே சிறந்த முறைமை என உறுதி பூண்டார். இதை அவர் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸில் இருக்கும் போதே கூறினார்.
1947 ஐப்பசியில் யாழ் முற்றவெளியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டாட்சி பற்றிப் பேசும்படி தந்தை செல்வாவை ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன்படியே செல்வாவும் பேசினார். சமகாலத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மூதவை உறுப்பினர் ஈ.எம்.வி.நாகநாதன் அவர்களும் மூதவையில் கூட்டாட்சி பற்றி விரிவான உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
ஆனால் 1948ல் சோல்பரி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட போது நம்மவர் எவரும், கூட்டாட்சி முன்மொழிவைச் செய்யாதிருந்தமை அபாக்கியமே. இது தொடர்பில் தந்தை செல்வாவும் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தோற்றத்தைத் தொடர்ந்து வடக்கு கிழக்கெங்கணும் கூட்டாட்சிக் கொள்கை பரப்புரை செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் பல்வேறு எதிர்ப்பலைகள் தோன்றின. மக்களின் ஆர்வம் இக்கொள்கையின்பால் இருந்ததால் எதிர்ப்புகள் அடங்கின. வடக்கில் போலவே கிழக்கிலும் கூட்டாட்சியின் தேவை உணரப்பட்டு மக்கள் ஆதரவு பெருகியது. கிழக்கிலே இம்முயற்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் முதன்மை பெற்று விளங்கியவர்களில் அமரர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களும் ஒருவராவார்.
கிழக்கில் தமிழரசுக் கொள்கையைப் பரப்புதலில் ஒரு மிகப் பெரிய தடை இருந்தது. அதுவே, யாழ் எதிர்ப்புக் கோட்பாடு. தங்கள் அரசியற் கருத்துக்களைத் தெளிவுபடுத்தும் வல்லமை அற்றிருந்தவர்கள் இந்த இலகுவான துவேஷப் பிரசாரத்தைக் கையில் எடுத்தார்கள். இதனை திருவாளர் செ.இராசதுரை தனது தீந்தமிழாலும், பகுத்தறிவுக் கொள்கைகளாலும், கூட்டாட்சி முறையின் இலகுவான விளக்கங்களாலும் முதலிலே முறியடித்தார்.
1956களிலிருந்து, சி.மூ.இராசமாணிக்கம், பொ.மாணிக்கவாசகம் போன்றோரோடு மட்டு நகரிலும், கிராமங்களிலும் தோற்றம் பெற்ற பேச்சாளர்களும் கூட்டாட்சிக் கொள்கையை மக்கள் மனங்களில் படரவிட்டனர். கட்சிக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தனர்.
யாழ் துவேசத்தில் வண்டியோட்டியோர், ஓட்டுவோரெல்லாம் உண்மையில் தமது கொள்கையை விளக்கத் திராணியற்றிருந்தோரே. அன்றும், இன்றும் இதுவே உண்மை. எஸ்.யு.எதிர்மனசிங்கம் (பட்டிருப்பு) அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்களம் மட்டும் தீர்மானத்தால் கட்சியை விட்டு வெளியேறினார். களனி மாநாட்டில் 18 மாசி 1956ல் சிங்களம் மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்படமுன் இது நிகழ்ந்தது.
இதே நிலைப்பாட்டையே வி.நல்லையா அவர்களும் (கல்குடா) எடுத்திருந்தார். இவர்களெல்லாம் 20 மாசி 1956ல் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடாத்திய அடைப்பு (ஹர்த்தால்) மற்றும் கறுப்புக் கொடிப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதற்கு மேலதிகமாக எஸ்.யு.எதிர்மனசிங்கம் அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் சேர்வதற்கு செ.இராசதுரை மூலம் முயற்சி எடுத்தார். ஆனால், சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் முந்திக் கொண்டார். தனக்கு வேட்பாளர் நியமனம் கிடைக்காதென்று கருதியதால் எஸ்.யு.எதிர்மனசிங்கம் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்பைத் துண்டித்தார். கொள்கை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடல்ல இது.
வி.நல்லையா அவர்கள் யாழ் எதிர்ப்பை பரப்புரைக்காகத் தொடர்ந்தும் கடைப்பிடித்தார். ஆனாலும், அவரது உறவினர்கள் யாழ்ப்பாணத்தாரோடு திருமண உறவுகளை வைத்துக் கொண்டார்கள். 1965 பொதுத் தேர்தலில் வி.நல்லையா அவர்கள் அகில இலங்கைகத் தமிழ் காங்கிரஸ் சாhபில் அதன் மிதிவண்டி சின்னத்தில் போட்டியிட்டார்.
யாழ் எதிர்பப்பைப் பரப்புரைக்காகப் பயன்படுத்திய இன்னுமொருவர் கே.டபிள்யு.தேவநாயகம் (கல்குடா) அவர்கள். இவர் 1970களில் தமிழர் கூட்டணியிலும் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் சேர்ந்து உழைத்தவர். அவரது இரண்டாம் துணைவியார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
இவ்வரிசையிலே இன்னொருவராக இடம் பெற்றவர் இராஜன் செல்வநாயகம் அவர்கள் (மட்டக்களப்பு) இவர் முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்தவர். இவரது தந்தையார் வியாபாரம் நிமித்தம் மட்டக்களப்பில் குடியேறியவர். இப்பொழுதும் சிலர் இந்தப் பேதம் ஓதுகின்றனர். இவர்களும் மேற்சொன்ன முன்னவர்கள் போலவே குறுகிய அரசியற் பரப்புரை செய்வோரேயாவர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் கொள்கை முக்கியம். அப்பொழுதும், இப்பொழுதும். சிலர் பரப்புரை செய்வது போல் கட்சியில் யாழ் மேலாதிக்கம் உண்டெனில் அது முறியடிக்கப்பட வேண்டிதொன்றே. சில நிகழ்வுகளை உதாரணம் காட்டிச் சிலர் தமது பிற்போக்கான கருத்துக்களை மேலோங்கச் செய்யும் எத்தனிப்பு முறியடிக்கப்பட வேண்டும். அதன் பொய்மையை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். ஏனெனில் தமிழ்த் தேசியம் மிக முக்கியமானது. கட்டிக் காப்பாற்றப்பட வேண்டியது.
இவற்றையெல்லாம் முறியடித்துக் கொண்டு இலங்கைத் தேசியத்தின் நஞ்சாய் ஒற்றையாட்சிக் கோட்பாடு அமையும் என்ற கொள்கையை தந்தை செல்வா முன்வைத்தார். சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் இக்கொள்கையை மக்கள்பாற் கொண்டு சென்றார். 1956 சித்திரையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்தைக் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டார். வெறும் 106 வாக்குகளால் தோல்வியுற்றார்.
அவரது தேர்தல் பரப்புரையின் உண்மைகளை அதிக தாமதமில்லாமலே மக்கள் உணர்ந்தனர். 1956 ஆனி 05ல் வந்த சிங்களம் மட்டும் சட்டம் இவருக்கு எதிராக வாக்களித்த மக்களை கைபிசைந்து நிற்க வைத்தது.
1952ல் சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது சுயேட்சையாகக் கத்தரிக்கோல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 1949ல் கல்லோயாக் குடியேற்றத் திட்டம் செயற்பாட்டுக்கு வந்தது. டி.எஸ்.சேனாநாயக்கா, பிரதமர் இதனைத் திட்டமிட்டார், தொடங்கியும் வைத்தார். பட்டிப்பளை ஆறே கல்லோயா எனப் பெயர்மாற்றம் பெற்றது. அது தமிழர்தம் பூமி. கி.மு 3ம் நூற்றாண்டில் தமிழ்க் குடியேற்றங்களால் செழிப்படைந்திருந்த பகுதி. கி.பி 13ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் மன்னன் மாகோனின் ஆட்சியில் வளர்ச்;சி கண்ட பூமி.
டி.எஸ்.சேனநாயக்கா அவர்களின் நெறிவுறுத்தலுக்கமைய திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டது. பிரதமரின் நிரந்தரச் செயலாளர், சேர்.கந்தையா வைத்தியநாதன் நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், கி.அழகரெத்தினம் நில அளவைப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி எஸ்.புரோக்கியர் என்போர் பணியைத் திறம்பட நிறைவேற்றினர். நாற்பது கிராமங்களை அமைப்பதற்கான வரைபடம் தயார். ஆறு கிராமங்கள் தான் தமிழர்கட்கு என்றபோது தான் திட்டம் வரைந்த குழுவினர் திகைத்தனர். நான்கைந்தைக் கூட்டிக் கேட்கக் கூட அவர்களால் முடியவில்லை!
அப்போது மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களாயிருந்த எஸ்.யு.எதிர்மனசிங்கம் (பட்டிருப்பு), அகமட்லெவ்வை சின்னலெவ்வை (மட்டக்களப்பு), வி.நல்லையா (கல்குடா) அதிகளவு குடியேற்றக் கிராமங்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை. ஆனால், தமிழரசுக் கட்சியினர் வடக்கில் இருந்து வந்து அப்போதே அவர்களுடன் தொடர்பில் இருந்த செ.இராசதுரை அவர்களையும் அழைத்துக் கொண்டு கல்முனை, அட்டாளச்சேனை, போன்ற இடங்களுக்கு வந்தார்கள். நடைபெறவுள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பற்றி அங்கிருந்த தமிழ் முஸ்லீம் மக்களுக்கு விளக்கினார்கள். மக்களும் விழிப்படைந்தார்கள்.
சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் இன்னும் தமிழரசுக் கட்சியில் சேரவில்லை. எனினும், அவரது உணர்வுகள் தமிழரசில் தான் ஒன்றியிருந்தன. தனது மறைமுக ஆதரவை அவர் வழங்கினார். 1952 பொதுத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றார். தமிழர்கட்கென ஒதுக்கப்பட்ட கிராமங்களிலும் அரசின் ஒத்துழைப்பை நாடாமலே மக்களைக் கொண்டு குடியேற்றினார். அரச உதவியை நாடினால் அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி தாமதம் செய்து அந்தக் கிராமங்களிலும் சிங்களவர்களையே குடியேற்றுவார்கள் என்பதை அவர் அனுபவம் மூலம் அறிந்து வைத்திருந்தார். காணித் திணைக்களத்தில் பணிப்பாளராகப் பணிபுரிந்த அனுபவமும் அவருக்கு இவ்விடயத்தில் உதவியது.
மேற்குறித்தவாறு 1956 பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோற்ற போதும், அவரது மனம் கவர்ந்த தந்தை செல்வாவின் கொள்கைகளைப் பரப்புவதில் ஆர்வத்தோடு செயற்பட்டு வந்தார். இவ்வேளையில் 1956 ஆனி 05ல் காலிமுகத் திடலில் சிங்களம் மட்டும் சட்டத்துக்கெதிரான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம் இடம்பெற்றது. காடையர்கள் சத்தியாக்கிரகிகளைத் தாக்கினர். பின் இது இனக்கலவரமாக உருவெடுத்தது.
கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் குடியேறிய தமிழர்கள் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். காடையர்கள் இராணுவம் சகிதம் அம்பாறையின் எல்லைக் கிராமமான துறைநீலாவணையைத் தாக்கும் எண்ணத்துடன் துறைநீலாவணை முகப்பை அண்மித்தனர். எதிர்பாராத திசைகளிலிருந்தெல்லாம் தமிழரின் துப்பாக்கி வேட்டுக்கள் கிளம்பின. காடையர்கள் திரும்பி ஓடினர். மக்களின் பின்னணியிலே சி.மூ.இராசமாணிக்கம் நின்றார்.
இரண்டொரு நாட்களின் பின் இராணுவத் தளபதி ஒருவரின் தலைமையில் இரணுவ அணியொன்று துறைநீலாவணையைச் சுற்றி வளைத்தது. சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் நிகழ்விடத்துக்குச் சென்றார். தளபதியைக் கண்டார். தன்னை வீழ்த்திய பின்தான் தனது மக்களைத் தொட முடியும் என தனது சட்டைப் பொத்தான்களைக் களற்றி தளபதிக்கு தன் மார்பைக் காட்டிச் சுடும்படி கர்ச்சித்தார். தளபதி அடங்கினார். வந்த வழியே திரும்பினார்.
முன்னர் குறிப்பிட்;டது போல 1956 மாசி மாதத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் போராட்டங்கள், மாநாடுகள், முக்கிய பரப்புரைகளிலெல்லாம் சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். 1960 பங்குனி மற்றும் 1960 ஆடிப் பொதுத் தேர்தல்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு இரண்டு தேர்தல்களிலும் வென்றார்.
சி.மூ.இராமாணிக்கம் அவர்கள் சிறந்த கல்விமமான். இலங்கைகப் பேராதனைப் பல்ககலைக்கழத்தில் கற்றுப் பொருளாதாரத் துறையில் கலை இளவல் சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் பல்கலைக் கழகத் தேர்வில் சித்தியெய்தி விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். காணி ஆணையாளர், மாவட்டப் பதிவாளர் என்னும் பதவிகளையும் வகித்தவர். மக்களின் வேண்டுகோளால் அரசியலில் ஈடுபட்டவர். தந்தை செல்வாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தமிழ்த் தேசியத்தில் தோய்ந்தவர். இதனால் நிலையான அரசியற் கொள்கையோடு தமிழ் மக்களுக்காய் தன்னை அர்ப்பணிக்கத் தலைப்பட்டார்.
இவரின் ஆற்றலையும், ஆளுமையையும் அடையாளம் கண்ட தமிழரசுக் கட்சி 1961, 1962, 1969 களில் நடைபெற்ற கட்சியின் மூன்று மாநில மாநாடுகளிலும் கட்சித் தலைவராக அவருக்கு மகுடம் சூட்டியது. கடைசியாக 1972ல் நடைபெற்ற சிறப்பு மாநாட்டுக்கும் அவரே தலைமை தாங்கினார்.
1961 தை மாதம் 19, 20, 21ம் நாட்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது. நாற்பத்தொரு வயதினரான சி.மூ.இராசமாணிக்கம் தலைமை தாங்கினார்.
“இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் தாயகமான தெற்கு முனையான மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நான் வந்திருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் உள்ள உங்களிலும் பார்க்க சிங்களத் தாக்குதலின் வேகத்தை நன்கறிந்தவன் நான்” எனத் தொடங்கிய சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள்,
“எவ்வகையில் பார்த்ததாலும் நாம் ஒரு தேசிய இனம் என்பதில் ஐயமில்லை. நாம் ஒரு திட்டவட்டமான எல்லையுள்ள பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டுள்ளோம். ஒரு பொது மொழியைப் பேசுகின்றோம். நீண்ட நெடுங்காலமாக வளர்ந்து வந்த தனிப் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் எமது சொந்தமாகக் கொண்டிருக்கின்றோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ‘நாம் ஒன்று’ எனும் உணர்ச்சியை தமிழ் பேசும் மக்களாகிய நாமெல்லாம் பெற்றிருக்கின்றோம்” என முழக்கமிட்டார்.
“தனிமனிதன் வாழும் உரிமையை மறுப்பது கொலை. ஒரு இனத்தின் வாழும் உரிமையை மறுப்பது இனக்கொலை. 1946 மார்கழி 11ம் நாளைய ஐநா பொதுச் சபையின் 96வது தீர்மானத்தில் ‘ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்லுதல், உடல் உளத்துக்குப் பாரதூரமான ஊனம் விளைவித்தல், முழுமையாகவோ, பகுதியளவிலோ அழிக்கக்கூடிய வாழ்க்கைச் சூழலை திட்டமிட்டு ஏற்படுத்துதல் என்பன இனக்கொலை” என்பதைச் சுட்டிக்காட்டி அரசின் இன அழிப்புச் செயற்பாட்டைக் கண்டித்தார்.
1962 ஆவணி 31 மற்றும் புரட்டாசி 1ம், 2ம் நாட்களில் மன்னாரில் தமிழரசின் எட்டாவது மாநில மாநாடு இடம்பெற்றது. இதன் தலைவராகவும் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களே விளங்கினார்.
“… நிலைமை தாங்க முடியாததாகிவிட்டது. தன்மானமுள்ள எந்தத் தமிழ் மகனும் இந்த நிலைகண்டு உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது. ஆனால் பரிகாரம் என்ன? இப்படியான நிலையில் அகப்பட்ட வேறு தேசங்கள் எதிர்ப்புப் புரட்சியையோ அன்றி உள்நாட்டுப் போரையோ வழியாகக் கொண்டார்கள் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அதுதான் சம்பிரதாய வழியாகவும் இருந்து வந்தது. ஆனால், நிச்சயமாகச் சொல்லுவேன் ஆயுதப் போர் எவ்வித பிரச்சனைக்கும் தீர்வுகாண மாட்டாது. அவை மேலும் பிரச்சனைகளை உண்டாக்கும். பலாத்காரம் பலாத்காரத்தையே வளர்ப்பதாகும்”
‘தமிழரசுத் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களும், மகாத்மா காந்தி காட்டிய வழியையே காட்டியுள்ளார். அப்பாதையில் செல்லும் போது எத்தகைய ஆத்திரமூட்டும் நிகழ்ச்சி நிகழ்ந்தாலும், இம்மியளவும் பலாத்காரத்தை உபயோகிக்காது சாத்வீகத்தில் என்றும் தளராது உறுதியாக நின்று விடுதலை காண்போமாக” என்றார்.
1969 சித்திரை 7, 8, 9ம் நாட்களில் உடுவிலில் நடைபெற்ற தமிழரசின் பதினொராவது மாநில மாநாட்டுக்குத் தலைமை வகித்த சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் “கூட்டாட்சியில் (சமஷ்டி) ஒருவரும் நட்டமடையப் போவதில்லை. நிச்சயமாகச் சிங்கள மக்கள் நட்டமடைய மாட்டார்கள். ஏனென்றால், இது பெரும்பான்மையோரின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, சிறுபானன்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கும் திட்டத்தைப் போன்றதல்ல. ஆதலால் கூட்டாட்சி அரசியல் எல்லோரும் விரும்ப வேண்டிய ஒரு இலட்சியமாகும்” என்ற தந்தை செல்வாவின் தமிழரசுத் தொடக்க உரையின் முக்கிய குறிப்பைச் சுட்டிக் காட்டியதோடு, “பிரதேசம், மதம், சாதி ஆகியவற்றையிட்டு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, இனத்தை ஒற்றுமைப் படுத்துவது எமது கட்சியின் அடிப்படைக் கொள்கையாகும்” என்றார்.
1972 தை 30ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசின் சிறப்பு மாநாட்டுக்கும் சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் தலைமையேற்றார். சி.மூ.இராசமாணிக்கம் அன்றைய தலைமையுரையிலே இரண்டாம் குடியரசின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழரசை அங்கமாகக் கொண்ட தமிழர் கூட்டணி சமர்ப்பித்த ஒன்பது அம்சக் கோரிக்கையை விளக்கிப் பேசினார்.
மேலும், ‘இரண்டாம் குடியரசு அரசியலமைப்பினால் சிங்கள மக்கள் தம் உரிமையை முழுமையாகப் பெறுகின்ற அதே செயலினால், தமிழினம் முழுமையாக அடிமையாக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனப் பிரகடனப் படுத்தினார்.
இவற்றாலெல்லாம் அமரர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்கள் 1956ம் ஆண்டு தொட்டு தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழ் பேசுமினத்தின் சுயநிர்ணயம் என்பவற்றை வலியுறுத்தி வந்தமை புலனாகின்றது. இவற்றைப் போல் பேதப்படுத்தும் பிராந்திய வேற்றுமையை அவர் நியாயத்தோடு நிராகரித்தார் என்பதும் தெளிவாகின்றது.
சிங்கள மக்கள் கண்டியச் சிங்களவர், கரையோரச் சிங்களவர் என்ற பாரம்பரியத்தை கட்டிக் காத்து வரலாற்றுக் காலம் முழுக்க வாழ்ந்து வந்தார்கள். சுதந்திரமடைந்ததும் அதனை அப்பால் தள்ளி சிங்கள தேசிய இனமாக ஒன்றுபட்டு எழுந்து நிற்கின்றார்கள். நாமும் எம்மிடையே உள்ள வேற்றுமைகளைக் களைய வேண்டும். தந்தை செல்வா, சி.மூ.இராசமாணிக்கம் போன்றோர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். மேலாதிக்கம் ஏதும் இருப்பதாய் உணர்ந்தால், அதற்கேற்ற எச்சரிக்கையுடன் நடந்துகொள்வதே வழி. கொள்கை தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்தக் கொள்கை இல்லையென்றால் கிழக்கு மாகாணம் கதிர்காமமாய், காலியாய், நீர்கொழும்பாய், சிலாபமாய், புத்தளமாய் தமிழர் அடையாளம் முற்றாக மறைந்த அல்லது மறைந்து கொண்டிருக்கும் மாகாணமாய் ஆகியிருக்கும்.
எனவே, சி.மூ.இராசமாணிக்கனாரையும் அவரது செயற்பாடுகளையும் மனதில் நிறுத்திக் கொள்வோம். அவர் காட்டிய தந்தை செல்வாவின் வழியில் ஒன்றுபடுவோம். தமிழின இருப்பைக் கட்டிக் காப்போம். கூட்டாட்சி ஐக்கிய இலங்கைக்காக உழைப்போம். தமிழ் பேசும் தேசிய இனமாக எழுச்சியடைவோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.