கொரோனா தொற்று ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருந்துப்பொதி அறிமுகம்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்று நோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடியின் பணிப்புரைக்கமைய ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிகவின் வழிகாட்டலின் அடிப்படையிலும் கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருந்துப்பொதி ஒன்றை அறிமுகம்  செய்துள்ளோம் என நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம். நக்பர் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்தார்.

அம்பாறை நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அங்கு கருத்தில் தெரிவித்ததாவது

நாங்கள் அறிமுகம் செய்துள்ள ஆயுர்வேத மருந்துப்பொதியில் ஐந்து நபர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான   சுவதாரணி, தாஸி சாதி தூள், சித்தராம வட்டி, தேசந்துங் கல்க, சுதர்சன தூள், ஆவி பிடிக்க உபயோகிக்கும் எண்ணெய், தொண்டையில் பூசும் எண்ணெய் என்பன  அடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற மக்கள் காட்டுவிலங்குகள் பறவைகளின் தொடர்புகளை குறைத்து கொள்வதுடன் தற்போதைய கொரோனா  காலகட்டத்தில் சுகாதார பழக்கவழக்கங்களை எந்த துறையினராக இருப்பினும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதுடன் தடுப்பூசிகளை தவறாமல் பெற்றுக்கொள்வது அவசியம்.

அடிக்கடி தோடம்பழம் தேசிக்காய் போன்ற பானங்களை நாம் அருந்த வேண்டும்.அதிகமான இயற்கை உணவுகளை நாம் உண்ண வேண்டும்.8 தொடக்கம் 10 மணிவரை ஓய்வெடுக்க வேண்டும்.அரிசிக்கஞ்சி போன்றவற்றை அடிக்கடி அருந்த வேண்டும். மாமிச உணவுகளை தவிர்ப்பது நல்லது. சூரிய ஒளியில் 1 மணித்தியாலம்  கிடைக்க கூடிய வகையில் இருத்தல் வேண்டும்.எமது வீடுகள் நாம் வசிக்கின்ற இடங்களை நன்கு காற்றோட்டம் உள்ள இடமாக மாற்றி கொள்ளல் வேண்டும்.இவற்றை செய்வதன் ஊடாக டெல்டா மாத்திரமல்ல எந்த வைரஸ் திரிபுகள் எதிர்காலத்தில் உருவாகினாலும் அந்த நோயில் இருந்து நாம் எம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ள முடியும்.

தடுப்பூசி வழங்குதலானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தோற்றுவிக்கும் ஒரு செயற்பாடாகும்.இதனால் ஆயுள்வேத மருந்து வகைகளை பாவிப்பதனாலும்  எந்தவொரு பக்க விளைவுகளும் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்படாது என நம்புகின்றேன்.எனவே தான் மக்களிடம் தடுப்பூசிகளை முதலில் ஏற்றிக்கொண்டு  பக்கபலமாக இந்த ஆயுள்வேத மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.இதனூடாக கொரோனா தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும். இயற்கையினால் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் ஆபத்தை விளைவிக்க மாட்டாது மேலும் இதன்போது ஆயுர்வேத வைத்திய முறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் ஆயுள்வேத பானத்தை அருந்தும் முறைகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது . அத்தோடு கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு குறித்த மருந்து பொதி தக்க பயனை தரும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.