எமது இதயத்தால் அனுஸ்டிக்கும் அஞ்சலியை எத்தடையுத்தரவுகளும் தடுக்க முடியாது.

எமது இதயத்தால் அனுஸ்டிக்கும் அஞ்சலியை எத்தடையுத்தரவுகளும் தடுக்க முடியாது… (திலிபன் நினைவேந்தலுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி உபதலைவருக்கும் நீதிமன்றத் தடையுத்தரவு)

எத்தனை கெடுபிடிகள், எத்தனை நீதிமன்றத் தடையுத்தரவுகள் வந்தாலும் எமது இதயத்தால் அனுஸ்டிக்கும் அஞ்சலியை எதுவும் தடுக்க முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.

2021.09.15ம் திகதி தொடக்கம் 2021.09.26ம் திகதி வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிப்பது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலுக்கமைவாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழினத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை நீத்த எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை இவ்வருடம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் எங்களிடம் இருக்கவில்லை. ஏனெனில் இந்த அரசாங்கத்தின் இத்தகு அடக்குமுறையான ஆட்சியில் எவ்வித நினைவேந்தல்களும் செய்ய முடியாது என்பது நாம் அறிந்த விடயமே.

தமிழர்களின் விடயம் தொடர்பில் எவ்விழிகளில் அடக்கி ஒடுக்க முடியுமோ அத்தனை வழிகளையும் இந்த அரசாங்கம் கையாளுகின்றது. அதற்கு தற்போதைய கொரோனா நிலைமையும் கைகொடுக்கின்றது. கொரோனாவைக் காரணம் காட்டி தமிழர்களின் நிகழ்வுகளை மாத்திரம் அடக்க முயற்சிக்கின்றது.

என்ன இருந்தாலும், எத்தனை கெடுபிடிகள் வந்தாலும், எத்தனை நீதமன்றத் தடையுத்தரவுகள் வந்தாலும் எமது இதயத்தால் அனுஸ்டிக்கும் அஞ்சலியை எதுவும் தடுக்க முடியாது. அவ்விழிமுறைகளையே தற்போதைய நிலையில் நாம் கையாள எண்ணியுள்ளோம்.

தற்போதைய நிலையில் மக்களைத் திரட்டி அவர்களையும் கொவிட் அல்லலுக்குள் உட்படுத்தும் எண்ணமும் எமக்கில்லை. எம்மை நம்பும் எம் உறுப்பினர்களை அரசின் கொடூர பிடிக்கள் சிக்க வைக்கவும் நாம் தயாராக இல்லை. ஆனால், அனைத்திற்கும் காலமும், சர்வதேசமும் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.