முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய மைத்திரியும், ரணிலும்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் என்று கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
நல்லாட்சியை உருவாக்கி ஜனாதிபதியாக மைத்திரி அவர்களையும், பிரதமராக ரணில் அவர்களையும் கொண்டு வருவதற்கு  நம்பிக்கையுடன் பாரிய ஒத்துழைப்புகளையும் பங்களிப்புகளையும் செய்தது முஸ்லிம் சமூகம்.
இவ்வாறான பங்களிப்புக்களை செய்த அப்பாவி முஸ்லிம் சமூகமானது அதே நல்லாட்சிக் காலத்தில் எந்த ஒரு குற்றங்களும் செய்யாமல்  திட்டமிட்ட சூழ்ச்சிகளாலும், கலவரங்களாலும் அவர்களது சொத்துக்கள், உயிர்கள், பள்ளிகள்,வியாபார நிலையங்கள் போன்றன அழிக்கப்பட்டதோடு அநியாயமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு பெரும்பான்மை மக்களிடமிருந்து தூரமாக்கவும் பட்டார்கள்.
ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க, கிறிஸ்தவ சமூகமோ அமைதி காத்த போதிலும் சில பெரும்பான்மை இளைஞர்களும் யுவதிகளும் தூண்டப்பட்டு தொடர் தாக்குதல்களை நடத்தினார்கள்.
அச்சந்தர்ப்பங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய இராணுவமும் பொலிசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது என்பது மிகவும் மன வேதனையானது.
மைத்திரி, ரணில் மீது மாபெரும் நம்பிக்கையை வைத்திருந்த முஸ்லிம் சமூகத்தை தாக்குதல்களின் போது பாதுகாப்பதற்கும், பின்னர் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இருவரும் தவறிவிட்டார்கள்.
அவர்கள் விட்ட தவறுகளினால் சொத்துக்கள், உயிர்கள் அழிக்கப்பட்டமை மாத்திரமன்றி இன்னும் ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்களின் கைதுகளும் சிறைப் படுத்தல்களும் இன்னும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
இவ்வாறான குற்றச் சாட்டுகளுக்கு உரித்தான மைத்திரியும் ரணிலும் அதிலிருந்து மீள்வதானால் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.