ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில், நீட் எதிர்ப்பு கருத்து அரங்கம் வைகோ அறிக்கை.

மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை, ஒன்றிய அரசு திணித்த நாள் முதல், தமிழ்நாட்டில் அரியலுர் மாணவி அனிதா முதல் சௌந்தர்யா வரை 16 மாணவக் கண்மணிகள், தங்கள் உயிர்களைப் போக்கிக் கொண்டுள்ளனர். எனவே, நீட் தேர்வு கூடாது என, திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவிடம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருத்து அளித்தனர். அவற்றுள் 80 விழுக்காட்டினர், நீட் தேர்வுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

அதன் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன், நீட் தேர்வு கூடாது; அது சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை விளக்கி, அரசுக்கு அறிக்கை அளித்து இருக்கின்றார்.

அந்த அறிக்கையில்,

1. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், நீட் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்துகின்றார்கள். எனவே, நீட் தேர்வு, கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றது.

2. நீட் தேர்வு, தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவிக்கின்றது. அவர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணக்கொள்ளை நடத்த வழிவகை செய்கின்றது. தனியார் பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு முதலே நீட் பயிற்சிகளைத் தொடங்கி விடுகின்றார்கள்.

3. அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற அடித்தட்டு, ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை, நீட் தேர்வு தகர்த்துத் தரைமட்டம் ஆக்குகின்றது. பட்டியல் இனம் மற்றும் பழங்குடி மக்களுக்கான வாய்ப்புகளை முற்றுமுழுதாகத் தடை செய்கின்றது.

4. 2010-11 ஆம் கல்வி ஆண்டில், மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த 2332 பேருக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 14 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. நீட் தேர்வு அறிமுகம் ஆன பிறகு, சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 1604 பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்து இருக்கின்றார்கள்.

எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்.

எனவே, நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை, நாடு முழுமையும் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்காக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி சார்பில், சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய நான்கு மையங்களில், நீட் தேர்வுக்கு எதிரான கருத்து அரங்கம் நடைபெறும். மாவட்டச் செயலாளர்களின் வழிகாட்டுதலுடன், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஒருங்கிணைப்பில், மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். பெற்றோர்களும், மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டு, கருத்து அரங்குகளை வெற்றி பெறச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.