கல்முனை மாநகர சபை உறுப்பினர் அஸாம் இராஜினாமா

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்துள்ளார்.

கட்சியின் மீள் அழைத்தல் கொள்கையின் பிரகாரம் மற்றொருவருக்கு வாய்ப்பளிப்பதற்காகவே தான் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மேலதிக பட்டியல் மூலம் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். அத்தேர்தலில் இக்கட்சி எந்தவொரு வட்டாரத்திலும் வெற்றி பெறாத போதிலும் விகிதாசார அடிப்படையில் இம்மாநகர சபையில் மேலதிக பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தை பெற்றிருந்தது.

இந்த ஆசனத்திற்கு சுழற்சி முறையில் முதலாவது வருடத்திற்கு ஏ.ஜி.எம்.நதீர், இரண்டாவது வருடத்திற்கு முபாரிஸ் தாஜுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டு, அவரவர் பதவிக்காலம் பூர்த்தியடைந்ததையடுத்து இராஜினாமா செய்திருந்தனர். அவ்வாறே மூன்றாவது வருடத்திற்கு நியமிக்கப்பட்ட சட்டத்தரணி அஸாம் அவர்கள் தற்போது இராஜினாமா செய்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது.

இவரது இராஜினாமாவையடுத்து மருதமுனையை சேர்ந்த கட்சியின் மற்றொரு வேட்பாளரை உறுப்பினராக நியமிக்க அக்கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.