“குரு விருதுகள் 2021” : அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்முனை, சம்மாந்துறை வலயப்பணிப்பாளர்கள் விருதை வென்றனர் !

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கிய கல்வி வலயங்கள் மற்றும் பாடசாலைகளை பாராட்டி கௌரவிக்கும் “குரு விருதுகள் 2021” விருது வழங்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு அக்கரைப்பற்று தனியார் மண்டபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.சி.ஏ. ஹயூவின் தலைமையில் இடம்பெற்றது.

யூத் தமிழின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திறந்த பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பீ.சி. பக்கீர் ஜௌபர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விருதுகளை வழங்கிவைத்ததுடன் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்குகள், பெற்றோர்களின் வகிபாகங்கள், இலகுவான முறையில் மாணவர்களை கவரும் கல்வி முறைகள் பற்றி விசேட உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார்.

கடந்த பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அக்கரைப்பற்று வலயத்திற்கான விருதை அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மத்துல்லாவும், கல்முனை வலயத்திற்கான விருதை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனும், திருக்கோவில் வலயத்திற்கான விருதை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் வை. ஜெயசந்திரனும், பெற்றுக்கொண்டதுடன் சம்மாந்துறை வலயத்திற்கான விருதை வலயக்கல்வி பணிமனை அதிகாரியும் பெற்றுக்கொண்டனர். மேலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற கல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கான விருதை அதிபர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்விமான்கள், சட்டத்தரணிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்