பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பான பிரச்சனையை அரசியல் ரீதியான குழப்பமாக்காமல் சுமுகமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்…

பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்து வந்த பிச்சனையை அரசியல் ரீதியான குழப்பகரமாக உருவாக்காது சுமுகமானதொரு தீர்வு காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் அவர்களும் இன்று பெரியகல்லாறுக்கு நேரடி விஜயம் செய்து அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் தமக்கு தமது மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குமாறு தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் இருசாராருக்கும் நீண்ட நேரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டுக் கழகங்களை நான் நன்கு அறிவேன். விளையாட்டு மைதானத்தில் விளையாடுவது சம்மந்தமானது ஒரு பெரிய பிரச்சனையல்ல இக்கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தான் அதிலே விளையாடுகின்றார்கள். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அந்த விளையாட்டு மைதானத்திலே அவர்கள் விளையாடி வருகின்றபோது எதுவித சர்ச்சைகளும், இல்லாமல்தான் விளையாடி வருகின்றார்கள்.

ஒருசில மாதங்களுக்குள் இந்த குறிப்பிட்ட பிரச்சனை ஏற்பட்டிருக்கின்றது. அந்தப் பிரச்சனை பிரதேசசபை வரைச் சென்றிருக்கின்றது. பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகஸ்த்தர் மூலமாக பெறப்பட்ட அறிக்கைகள் மூலமாகவும்,  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரமும்,  அந்த மைதானத்தில் கடினப்பந்து தற்காலிகமாக விளையாடுவது நிறுத்தியிருக்கின்றார்கள். இதுதொடர்பில் உரிய விளையாட்டுக் கழகங்களுடன் பிரதேசசபைத் தவிசாளரும் நானும் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளோம். இதற்கு மிக விரைவில் சுமுகமான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியிருக்கின்றோம்.

இதனை அரசியல் ரீதியான குழப்பகரமாக உருவாக்குவது எமது நோக்கமல்ல. இளைஞர்கள் அந்த மைதானத்திலே விளையாட வேண்டும். பெரியகல்லாறு கிராமத்திலே கடினப்பந்து விளையாடுபவர்கள், கடந்த காலங்களிலே எமது பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்திருக்கின்றார்கள். நான்கூட இந்த மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளுக்கு அதிதியாகக் கலந்து கொண்டிருக்கின்றேன். எனவே இந்த மைதானத்தில் இளைஞர்கள் விளையாட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அது மிகவிரைவில் நிறைவேறும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன்.

குறித்த மைதானம் தொடர்பில் பொதுமக்கள் எமக்கு வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமையவும், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகஸ்த்தர், உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளிட்ட பலரின் கருத்துக்களையும் பெற்று, அதில் கடினப்பந்து விளையாடுவதை தற்காலிகமாக தடை செய்திருந்தோம். இவ்வாறு விளையாடுவதை தற்காலிகமாகத் தடைசெய்தது அவர்களுக்கு எதிராக அல்ல இப்பிரச்சனைக்கு தீர்வு பெறுவதற்காகத்தான்.

எமது பிரதேசத்தினுள் இளைஞர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும். என்பது எனது விருப்பம். இதில் எதுவித அரசியலோ. தனிப்பட்ட விருப்பு வெறுப்போ கிடையாது. இருசாரரையும் ஒற்றுமைப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களுடன் இணைந்து நாம் முடிவெடுத்திருக்கின்றோம். இதற்கு மிகவிரைவாக பிரதேச சபைக்கோ வேறு யாருக்குமோ கலங்கம் ஏற்படாதவாறு, இதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.