இந்த அரசு கடந்த அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் பழிவாங்குவதாகக் கருதி செயற்திட்ட உதவியாளர் நியமனம்

இந்த அரசு கடந்த அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் பழிவாங்குவதாகக் கருதி செயற்திட்ட உதவியாளர் நியமனம் பெற்ற இளைஞர், யுவதிகளைப் பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது… (செயற்திட்ட உதவியாளர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – எம்.கமலதாஸ்

செயற்திட்ட உதவியாளர் நியமனம் பெற்ற இளைஞர், யுவதிகள் இருந்த தொழிலும் இல்லாமல், கிடைத்த நியமனமும் இல்லாமல் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர். இந்த அரசு கடந்த அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் பழிவாங்குவதாகக் கருதி எங்களைப் பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது என செயற்திட்ட உதவியாளர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.கமலதாஸ் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகில இலங்கை செயற்திட்ட உதவியாளர் நியமனம் தொடர்பில் நாங்கள் பலமுறை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தோம். எங்களது நியமனங்கள் மறுதளிக்கப்பட்டமை சம்மந்தமாக அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சுக்கு எழுத்து மூல அறிவிப்புகள் நேரடிச் சந்திப்புகள் போன்றனவும் மேற்கொண்டிருந்தோம். இதற்கான பதிலாக இந்த நியமங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இதுவரை இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை.

எமக்கு வழங்கப்பட்டிருந்த நியமனம் கடந்த ஜனாதிபதித் தேர்தலைக் காரணம் காட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த நியமனத்தை மீள வழங்குமாறு சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அமைச்சுக்கு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்திருந்தது. ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை.

இற்றைக்கு இரண்டு வருடங்களாக இந்த நியமனங்களை மீளப் பெறுவதற்கு முயற்சித்தும் இன்னும் வழங்கப்படவில்லை.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த செயற்திட்ட உதவியாளர் நியமனம் நாடளாவிய ரீதியில் 6547 பேருக்கு வழங்கப்பட்டது. நியமனம் பெற்று மூன்று நாட்கள், ஒரு வாரம் என்ற ரீதியில் நாங்கள் கடமைக்குச் சென்று இடைநிறுத்தப்பட்டிருந்தோம். பின்பு இந்த நியமனங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்கள். இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த அரசு கடந்த அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் பழிவாங்குவதாகக் கருதி நியமனம் பெற்ற இளைஞர்களையும், யுவதிகளையும் பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் துரித நடவடிக்கை எடுத்து எமது நியமனத்தை வழங்க வேண்டும்.

இந்த நியனங்கள் வழங்கப்படாது இருக்கும் பட்சத்தில் நாங்கள் சாத்வீக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க ஆயத்தமாகவுள்ளோம். எனவே துரித கதியில் இதற்குரிய சாதகமான பதிலை அரசும், துறைசார்ந்த அமைச்சரும் வழங்கி எம்மை மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த 6547 நியமனதாரிகளும் ஏற்கனவே ஏதொவொரு வகையில் ஒவ்வொரு தொழிலில் இருந்தவர்கள். ஆனால் தற்போது இருந்த தொழிலும் இல்லை, கிடைத்த நியமனமும் இல்லாமல் நடுவீதியில் நிற்கின்றனர். எனவே எங்கள் நிலைமைகளைப் புரிந்து எமது நியமனங்களை மீள வழங்கி கடமைக்குச் சமூகமளிக்கச் செய்யுமாறு தங்களை மனதார வேண்டுகின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.