தொடரும் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்து மீறல்; விரைவில் இந்தியன் இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடாத்துவோம் – முல்லை மீனவர்கள் எச்சரிக்கை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு இந்திய மீனவர்கள்மீது மிகவிரைவில் தாக்குதல் நடாத்துவோம் என முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 10.10.2021 அன்று ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15இற்கும் மேற்பட்ட படகுகளின்வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலே அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் இந்தியன் இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.

அவ்வாறு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்குப் பிற்பாடு, ஆறுமாத காலமளவில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்க இந்தியன் இழுவைப்படகுகளின் வருகை இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து இரண்டு கடல்மயில் தூரமளவில் இந்தியன் இழுவைப் படகுகள் வருகைதருவதுடன், எமது மீனவர்களின் வலைகளும் இந்தியன் இழுவைப் படகுகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.

இப்படியாக இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதால் எமது வாழ்வாதாம் கேள்விக்குறியாகியுள்ளது.

குறிப்பாக கடந்த 10.10.2021 அன்று ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் தொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15இற்கும் மேற்பட்ட படகுகளின்வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டிலே பொருட்ளின் விலைகள் அதிகரித்துவருகின்றன. அதற்கமைய மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

எனவே எமது மீனவர்களின் பல இலட்சக் கணக்கான கடற்றொழில் வலைகள் இந்தியன் இழுவைப் படகுகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பல இலட்சம் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களை இழந்துள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாகியுள்ளது.

இந்தியன் இழுவைபபடகுகள் எமது மீனவர்கள் வலைளை சேதப்படுத்தியுள்ளதால், எமது மீனவர்கள் பலரும் தொழிலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், இங்குள்ள மீனவர்கள் ஏற்கனவே யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து சொல்லொணாத் துயரங்கள் மத்தியில் வழ்த்துகொண்டிருக்கின்றார்கள்.

இந் நிலையில் இங்குள்ள மீனவர்கள் தம்மிடமிருந்த நகைகளை அடகுவைத்து, கடன்தொல்லைகளுக்கு மத்தியிலேயே இந்த கடற்றொழில் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இப்படியான இடர்பாடுகளுக்கு மத்தியில் நாம் கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கையில்,இவ்வாறு இந்தியன் இழுவைப்படகுகள் எமது கடற்றொழில் உபகரணங்களைச் சேதப்படுத்துவதுடன், எமது கடல் வளத்தினையும் சூறையாடிச்செல்வதை எம்மால்ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இப்படியான நிலையில் மீனவர்களான எமக்கு கடன்களை வழங்குவது யார்? இந்த அரசாங்கம் எங்களுக்குரிய நட்ட ஈடுகளை வழங்குமா? மீனவர்கள் விடயத்தில் இந்த அரசாங்கம் பாராமுகமாக இருக்கின்றது.

இந்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராகஇருப்பவர் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் சற்றேனும் சிந்திக்கவேண்டும்.

ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களிலே பலமுறை இந்த பிரச்சினைகள் தொடர்பிலே பேசியிருக்கின்றோம். அதிலே கலந்துகொள்கின்ற கடற்றொழில் அமைச்சர் எமது பிரச்சினைகளுக்கு எந்த தீர்வுகளையும் தெரிவிப்பதில்லை.

கடற்றொழில் அமைச்சர் தற்போது இடம்பெறுகின்ற இந்த இந்தியன் இழுவைப்படகுகளின் அத்துமீறல் குறித்து எம்மோடு கலந்துரையாடுவதுமில்லை, இங்கு வருவதுமில்லை.

ஆனால்இதற்கு முன்னர் கடற்றொழில் அமைச்சராக பெரும்பாண்மை இனத்தவர்கள் இருக்கும்போது, எமது மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுதொடர்பிலே நேரடியாக வருகைதந்து ஆராய்வார்கள். அப்படி ஆராய்ந்து எமது மீனவர்களின் பிரச்சினைகள் சிலவற்றிற்கு பெரும்பான்மையின கடற்றொழில் அமைச்சர்களாக்இருந்தவர்கள் கடந்த காலங்களில் தீர்வுகளையும் பெற்றுத்தந்திருக்கின்றனர்.

தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளுக்கு துணைபோகின்றார் என்றே எம்மால் கூறவேண்டியுள்ளது.

ஏன் எனில் டக்ளஸ் தேவாநந்தா கடற்றொழில் அமைச்சுப்பொறுப்பை ஏற்ற பின்னரே இந்திய மீனவர்களின் வருகை மிக அதிகளவாக அதிகரித்துள்ளதுடன், இந்தியமீனவர்கள் எமது கடற்கரையிலிருந்து மிகக்குறைந்த தூரத்தில் தமது தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

அது மாத்திரமின்றி எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி வருகைதருகின்ற இந்திய மீனவர்கள், மிகவும் சுதந்திரமான முறையில் இழுவைமடி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட அனைத்துவிதமான தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றன. அவர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் இருப்பதில்லை.

இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்பரப்பிற்குள் வருகைதருவதை கடற்படையினருக்கு அறிவித்தால், அவர்களும் இந்தியமீனவர்களின் அத்துமீறிய வருகையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றார்களே தவிர, கடற்படையினரும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம், கடற்படை, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் உள்ளிட்டவர்களும் இந்த விடயங்களில் கவனம்எடுத்து உரியவர்களிடம் இந்த விடயங்களைக் கொண்டுசென்று, இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகையினைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்திய மீனவர்கள் இங்கு வருகைதருகின்றார்கள்எனத் தொடர்ந்தும் எம்மால் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

கடந்த நான்குவருடங்களுக்கு முன்னர் எமது கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட இந்தியன் இழுவைப் படகு ஒன்றினை மீனவர்கள் இணைந்து கரைக்கு கொண்டுவந்திருந்தோம். உரிய அதிகாரிகள் வருகைதந்து இனி இவ்வாறு கரைக்கு இந்தியன் இழுவைப்படகுகளைக் கொண்டுவரவேண்டாம் எனக் கூறியிருந்தனர்.

ஆனால் இனி அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் வருகைதருகின்ற இந்திய  மீனவர்கள் மீது இனி நாம் தாக்குதல்களை மேற்கொள்வோம். இந்திய மீனவர்களின் வருகை தொடருமானால் நிச்சயமாக முல்லைத்தீவு மீனவர்கள் அனைவரும் திரண்டு இந்திய மீனவர்கள்மீது மிகவிரைவில் தாக்குதல் நடாத்துவோம்.

அதேவேளை எதிர்வரும் தை, மாசி ஆகிய காலப்பகுதிகளில் இடம்பெறும் இறால் தொழிலுக்காக நாம் பெருமளவிலான முதலீடுளைச் செலவிட்டு இறால் தொழிலை மேற்கொள்ள இருக்கின்றோம். அந்தத் தொழிலை அற்றுப்போகச்செய்கின்ற வித்ததிலேயும் இந்தியன் இழுவைப் படகுகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

எனவே உரிய தரப்பினர் இந்த இந்தியன் இழுவைப் படகுகளின் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – என்றனர்.

மேலும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மீனவர்களின் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் நேரடியாகச் சென்று கேட்டறிந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.