கொள்ளுப்பிட்டி புதிய சந்தை வளாகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தல்

முதலீட்டாளர்களை ஊக்குவித்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து புதிய கொள்ளுபிட்டி சந்தை வளாக திட்டத்தை துரிதப்படுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (26) பிற்பகல் அறிவுறுத்தினார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கொழும்பு மாநகர சபையின் கட்சி தலைவர்களிடையிலான சந்திப்பின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது கொள்ளுப்பிட்டி சந்தை காணப்படும் இடத்தில் புதிய சந்தை வளாகத்தை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச வேலைத்திட்டம் கடந்த மார்ச் 12ஆம் திகதி கௌரவ பிரதமர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு மாநகர சபை மற்றும் அதற்காக தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளருடன் இணைந்து இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட திட்டத்தை மேலும் காலம் தாமதிப்பதற்கு பதிலாக தற்போது நிலவும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு கௌரவ பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த புதிய சந்தை வளாகத்தினுள் தற்போது அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்கும் விற்பனை நிலையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கௌரவ பிரதமர் வலியுறுத்தினார்.

குறித்த சந்திப்பில் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, துணை மேயர் அல்ஜாஜ் எம்.சீ.எம்.இப்பால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணயக்கார, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எஸ்.கே.தேவராஜ, நகராட்சி ஆணையாளர் ரோஷினி திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.