காரமுனை காணி விடயம் தொடர்பில் வாகரை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கண்டன தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்…

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் நாற்பத்தைந்தாவது சபை அமர்வு  இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது சம காலத்திற்கு மிக அவசியமான தனிநபர் பிரேரணை ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான சிவஞானம் கோணலிங்கம் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இப் பிரேரணை தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

கடந்த 21ம் திகதியன்று வாகரைப் பிரதேச சபைக்குட்பட்ட மாங்கேணி காரமுனையில் சட்டவிரோதமாகவும், மிக இரகசியமாகவும் மாகாண காணி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளினால் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியிருப்பு மற்றும் பயிற்செய்கை நடவடிக்கைகளுக்காக ஆறு ஏக்கர்கள் வீதம் அண்ணளவாக 200 பேருக்கு காணி அளவீடு செய்து கொடுப்பதற்காக மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்விடயங்களை அறிந்த அரசாங்கத்தினுடைய பங்காளிகளாக இருப்பவர்கள் இதனைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அப்பிரதேச மக்களோடு களம் நுழைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏனைய பொதுமக்கள் என பலரும் காணி வழங்கப்பட இருந்த காரமுனைக்குச் சென்று மேற்கொண்ட எதிர்ப்பினால் தடுத்து நிறுத்த முடிந்திருந்தது.

இதில் பங்கு கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் என்னுடைய சபை சார்பிலும், மக்கள் பிரதிநிதிகள் ஆகிய எமது சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இவ்வாறான சட்டவிரோதமான, சட்டத்துக்குப் புறம்பான விடயங்களை நாங்கள் மக்களுக்காக எந்த நேரத்திலும் அவர்களுடன் நின்று போராட தயாராக உள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் என்று தெரிவித்ததோடு, எமது மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பல கட்சிகள் இருக்கின்ற இந்த சபையிலே என்னால் இந்த பிரேரணையை முன் வைக்கப்படுகின்றது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரேரணையை ஆதரித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பிரதநிதித்துவப்படுத்தும் அந்த வட்டாரத்தை சேர்ந்த உறுப்பினர் அ.அன்ரன் அவர்கள், இப்பிரேரணையை வரவேற்று இந்த தீர்மானத்துக்கு தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தார். அத்தோடு ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் இந்த சபையில் இதற்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் எமது பிரதேச சபைக்குட்பட்ட நில ஆக்கிரமிப்பை நாங்கள் ஒற்றுமையாக இருந்து கட்சி பேதமின்றி தடுத்து நிறுத்த வேண்டும் என்பதனையும் தெரிவித்திருந்தார்.

பின்னர் உரையாற்றிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்  சி.துரைராஜசிங்கம் அவர்கள், இப் பிரேரணையை ஆதரித்ததுடன், இந்தத் தீர்மானத்தை பிரதேச சபையில் கண்டன தீர்மானமாக நிறைவேற்றி, இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை உரிய தரப்பினர்களுக்கு அனுப்பி இவ்வாறான விடயங்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

சபை உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் பிரதேச சபை உறுப்பினர் சி.கோணலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இப் பிரதேச சபையில் தவிசாளர் உட்பட மேலும் நான்கு உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஐந்து உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மூன்று உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் இரண்டு உறுப்பினர்கள ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் இரண்டு உறுப்பினர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சுயச்சை குழுவைச் சேர்ந்தவர்கள் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்