நீதி தேவதையாய் கோலோச்சிய கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன்..!
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனுக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று (30.10.2021) இடம்பெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
கல்முனையின் நீதி தேவதையாய் கடந்த மூன்று வருடங்கள் கோலோச்சிய கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து 01.11.2021 அன்று ஓய்வு பெறுவதையிட்டு அவரைப் பாராட்டி கௌரவிக்கும் விழா கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறுகிறது.
கொழும்பு மாநகரில் சட்டத்தரணியான பெரியார் செல்வராஜா மற்றும் ஆசிரியையான திருமதி வசஸ்பதி செல்வராஜா தம்பதியருக்குப் பிறந்த ஸ்ரீநிதி அம்மையார், தனது ஆரம்பக் கல்வியை மோதரையில் அமைந்துள்ள ஹம்ஸா முஸ்லிம் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். இங்கு அவரது தாயார் ஒரு ஆசிரியையாக கடமையாற்றினார். அப்பாடசாலையில் தரம் 5 வரை கல்வி கற்று தாயின் இடமாற்றத்தை அடுத்து மோதரை கதீட்றல் மகளிர் பாடசாலையில் பயின்றார். பின்பு இரத்மலான இந்து கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கு தெரிவானார்.
1983ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் நுழைந்த இவர் சட்டமாணியாக பட்டம் பெற்று, தந்தையின் வழியில் ஒரு சட்டத்தரணியாக 1992 ஆம் ஆண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவருடன் சமகாலத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களே மேல் நீதிமன்ற நீதிபதிகளான கௌரவ ஆ.இளஞ்செழியன் அவர்களும் கௌரவ அப்துல் மனாப் அவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஸ்ரீநிதி அம்மையார் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் சர்வதேச வணிகச் சட்டம், சர்வதேச நடுத்தீர்ப்புச் சட்டம் மற்றும் வங்கியியல் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பிலான சட்ட முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்கள். சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சட்ட ஆலோசகராக பல வருடம் கடமை புரிந்தார். இலங்கையின் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஒரு அங்கத்தவராக இருந்த அவர்கள் சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்ற வங்கி ஊழியர்களுக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வங்கித்துறையில் சுமார் பத்து வருடங்கள் கடமையாற்றிய நீதிபதி ஸ்ரீநிதி அம்மையார் 2002.10.15 ஆம் திகதி நீதித்துறையில் காலடியெடுத்து வைத்தார். முதலாவது நியமனமாக வவுனியா நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாகவும் நீதவானாகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக கடமையாற்றக் கிடைத்தது. யுத்த காலத்தில் வட மாகாணத்தில் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் நீதியை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டார்.
அன்னாரது நீதித்துறை சேவைகளை கருத்திற் கொண்டு 2018ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டு, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறையை உள்ளடக்கியுள்ள கல்முனை மேல் நீதிமன்ற வலயத்தின் குடியியல் மேன்முறையீட்டு நீதிபதியாகவும் செயற்பட்ட இவர் இப்பிரதேசத்தில் நீதி நிர்வாகத்தை செயல்படுத்துவதில் கால நேரம் பாராது பணியாற்றினார். அதனை என்றும் இப்பிரதேச மக்கள் நினைவு கூறுவர்.
இரக்க குணமும் தயாள சிந்தனையும் கொண்ட ஸ்ரீநிதி அம்மையார், நீதியை நிலைநாட்டுவதில் என்றும் அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் நியூசிலாந்து, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் இடம்பெற்ற பயிற்சி நெறிகளில் பங்குபற்றியுள்ளார்.
சந்தைப்படுத்தல் துறையில் பணியாற்றிய இராமையா நந்தசேகரன் அவர்களை 1996 இல் மணம் முடித்த நீதிபதி ஸ்ரீநிதி அம்மையார் மூன்று பிள்ளைகளின் தாயார். இவர்களுள் இரண்டு ஆண் பிள்ளைகள் பல்கலைக்கழக இறுதியாண்டில் கல்வி பயில்வதுடன் மகள் தற்போது உயர்தரத்தில் கல்வி பயில்கின்றார்.
இவரது துணிச்சலான பணிகளைப் பாராட்டி அமெரிக்க அரசாங்கத்தால் 2009ஆம் ஆண்டின் துணிச்சலான பெண் எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கல்முனையில் பணியாற்றிய காலத்தில் சட்டத்தரணிகளுக்கு சிறந்த ஆலோசகராகவும் நல்லதோர் வழிகாட்டியாகவும் இவர் திகழ்ந்துள்ளார்.


கருத்துக்களேதுமில்லை