பிரதமரின் பாரியாரின் தலைமையில் அதிக சுவையுடன் குறைவான உப்பிட்டு சமைப்பதற்கான தேசிய சவால் – 2021

இலங்கை போஷாக்கு வைத்திய சங்கம் ஏற்பாடு செய்த  அதிக சுவையுடன் குறைவான உப்பிட்டு சமைப்பதற்கான தேசிய சவால் – 2021 இறுதி போட்டி பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (30) பிற்பகல் கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

உலக சுகாதார அமைப்பு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை போஷாக்கு வைத்திய சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போட்டியின் முதல் சுற்றில் நிபந்தனைகளை பூர்த்தி செய்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நாற்பது அணிகள் போட்டியிட்டன.

அந்நாற்பது அணியிலிருந்து இருபது அணியினர் இரண்டாவது சுற்றுக்கும், இரண்டாவது சுற்றின் முடிவுகளுக்கு ஏற்ப ஐந்து அணிகள் இன்றைய தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் பங்குபற்றின.

இறுதி போட்டி நடைபெற்ற சந்தர்ப்பத்தில் வருகைத்தந்த பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் இலங்கை போஷாக்கு வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து இறுதி போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமரின் பாரியார் அவர்கள், போட்டியாளர்கள் சமைத்த உணவை சுவைத்தார்.

அதிகப்படியான உப்பு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

தினசரி உட்கொள்ளும் உப்பின் 80 சதவிகிதம் வீட்டில் சமைத்த உணவுகளில் இருந்து வருவதால், சமையலில் உப்பைக் குறைப்பது பாதகமான ஆரோக்கிய விளைவுகளை குறைக்கும்.

சமையல் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த உப்பை கொண்ட உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் இலங்கை போஷாக்கு வைத்திய சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் யுனிசெப் நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.