புத்தபகவானின் போதனைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் சுமனரத்தின தேரர்… (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் -பா.அரியநேத்திரன்)

புத்தபகவானின் போதனைக்கு கலங்கத்தை கற்பிக்கும் விதத்திலேயே மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் செயற்பாடுகள் அமைந்துள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகச் செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை இலங்கை தமிழரசு கட்சித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கடந்த 15ம் திகதி மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்கள் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் குழப்பம் விளைவித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு கடந்த 15ம் திகதி மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி சென்று பிரதேச செயலாளர் திருமதி தி.தட்சனகௌரியின் அலுவலக அறையில் புகுந்து அநாகரிகமான முறையில் சிங்கள தூசண வார்தைகளால் பிரதேச செயலாளரை ஏசியதோடு காரியாலய அறையில் நிலத்தில் கால்நீட்டி இருந்து கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
புத்த பகவானின் போதனைக்கு கலங்கத்தை கற்பிக்கும் விதத்திலேயே மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. அவரின் வன்முறைகள் கடந்த பல வருடங்களாகவே தொடர்கிறது. பௌத்த தலைமைப்பீடமோ அரசாங்கங்களோ அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவரின் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
குறித்த இப்பிக்கு கடந்த காலங்களில் அதே பிரதேச செயலகத்தில் பலமுறை பல அடாவடிகளை மேற்கொண்டதைக் கருத்திற் கொண்டு இந்நிலைமையை அவதானித்த பிரதேச செயலக ஏனைய அதிகாரிகளும் உத்தியோகஸ்த்தர்களும் பிரதேச செலயாளரின் அறைக்கு உடன் விரைந்துள்ளனர்.
இந்நிலையில் பிற்பகல் ஒரு மணியாகும் வரையிலும் பிக்கு பிரதேச செயலாளரின் அறையிலிருந்து எழும்பவே இல்லை. இதனால் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும் தமது அரச கடமையைச் செய்யமுடியாமல் போயிருந்தன. மிக நீண்ட நேரமாகியும் தமது கடமைக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்த பிக்குவை வெளியேற்ற வேறு வழியின்றி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் உடன் வீதிக்கு வந்து பிரதேச செயலக முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிசார் அங்கு வருகை தந்தபோதும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதுபோல் நடந்து கொண்டனர் என அந்த அலுவலகத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இவரின் அடாவடித்தனங்கள் பல தடவைகள் அரங்கேறியுள்ளது இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் இவருக்கு எதிராக எடுக்கப்படவில்லை.
கடந்த 11/11/2016, பட்டிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் கெவிளியாமடுவில் கள பயணம் செய்தபோது அப்போது இருந்த பிரதேச செயலாளர் திருமதி  வில்வரெத்தினம் மற்றும் கிராமசேவை அதிகாரிக்கும்  மிகவும் கீழ்த்தரமான வார்தைகளால் தமிழர்கள் புலிகள் எனவும், பறத்தமிழன் எனவும் தூசண வார்த்தைகளால்  திட்டித்தீர்த்தார்.
அந்த இடத்தில் கடமையில் நின்ற பொலிசார் வேடிக்கை பார்த்து நின்றனர். சம்பந்தப்பட்ட புத்தபிக்கு அத்துமீறி காணி அபகரிப்பு செய்வதை தடுக்கும் விதத்தில் நேரடியாக பார்வையிடச் சென்ற சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளரும் காரியாலய உத்தியோகத்தர்களும்
அங்கு சென்ற போது மிகவும் கீழ்த்தரமான முறையில் சம்பந்தப்பட்ட புத்தபிக்கு தமிழ் இனத்தை இம்சித்துள்ளார்.
இந்த புத்தபிக்கு ஏற்கனவே பலதடவை மட்டக்களப்பில் மாவட்ட அலுவலகம் பட்டிப்பளை பிரதேச செயலகம், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் என அத்துமீறி நுழைந்து குழப்பங்களில் ஈடுபட்ட பல வரலாறுகள் உள்ளன.
கடந்த 2014ல் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் அத்துமீறி பிரவேசித்து பிரதேச செயலாளரைத் தாக்க முயன்றார். இதுதொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காக்கி உடைதரிக்காத இராணுவ அதிகாரிபோன்று இவர் காவி
உடைதரித்து தமிழ்மக்கள் மீது காடைத்தனங்களைக் கட்டவிழ்த்துள்ளார்.
இவ்வாறான இனவாத புத்தமதகுருவின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
நல்லாட்சி அரசும் இவரின் காட்டுமிராண்டி செயற்பாடுகளைக் கணக்கில் எடுக்கவில்லை, தற்போதய அரசும் இவருக்கு  எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவில்லை.
ஒருநாடு ஒருசடம் என கூறி அதற்கான செயலணிக்கும் ஒரு பௌத்த பிக்கு ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த ஒருநாடு ஒருசட்டம் இலங்கையில் பௌத்த மதகுரு மாருக்கு இல்லையா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்