மட்டக்களப்பு ஆயர், அருட்தந்தையர்கள் உட்பட அரசியற் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு நீதி மன்றத் தடையுத்தரவு கோரி மட்டு தலைமையகப் பொலிசாரால் அறிக்கை சமர்ப்பிப்பு…

(சுமன்)
யுத்ததால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கக்கோரி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், அருட்தந்யைர்கள், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட்டோரின் பெயர்கள் உள்ளீர்க்கப்பட்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்ட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.கே.கெட்டியாராச்சி அவர்களினால் இவ்வறிக்கை இன்றைய தினம் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும நாட்களில் மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் வடக்கு கிழக்கு ஆயர்களினால் 20ம் திகதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடர்பான அறிக்கை என்பவற்றை மைய்படுத்தி இத் தடையுத்தரவு கோரும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2021.11.19ம் திகதி தொடக்கம் 2021.11.27ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலும் மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் யுத்தத்தில் மரணித்த தடை செய்யப்பட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூரும் முகமாக மட்டக்களப்பு ஆயரகத்தின் அதி வணக்கத்துக்குரிய பேராயர் பொன்னையா ஜோசப் என்பவருடைய தலைமையின் கீழ் விளக்கேற்றி நினைவு கூரல் மற்றும் வழிபாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக புலனாய்வுத் கவல்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றால் அதற்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதாகவும், இவ்வியக்கமானது இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளமையால் பயங்கரவாத செயற்பாடுகளை மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்நிகழ்வுகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வருவதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்படும் எனவும், இனங்களுக்கிடையே மோதல்கள் எற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களின் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் எதிர்காலத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை மீண்டும் தூண்டுகின்ற செயல்களாக அமையும் எனவும் கூறிப்பிட்டு இந்நிகழ்வகளுக்கான தடையுத்தரவினை அதிவணக்கத்துக்குரிய ஆயர் பொன்னையா ஜோசப் மற்றும் அவரோடு இணைந்த அருட்தந்தையர்களுக்கும் பிறப்பிக்குமாறு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று மேற்கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழீழ விடுதலை இயக்கத்தின பிரதித் தலைவர் பிரசன்னா இந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் அமைப்பின் இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் ஆகியோருக்கும் அவர்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்