தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களத்தின் கொள்கை

(சுமன்)

தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள நீதுpமன்றத் தடையுத்தரவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

தடைசெய்யப்பட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மரணித்தமை சம்மந்தாகவும், மற்றும் இயக்க உறுப்பினர்கள் மரணித்தமை சம்மந்தமாக மாவீரர் நினைவேந்தல் நடத்த இருப்பதாகவும் 2021.11.21ம் திகதி தொடக்கம் 201.11.27ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடாத்துவதாகவும், வருகின்ற 26ம் திகதி ஞாபகார்த்த தினம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், குறித்த திகதியையொட்டி முதியோர் சிறுவர் இல்லங்களுக்குச் சென்று இந்தப் பெயரை வைத்து உதவி செய்ய உள்ளதாகத் தகவல்கள் உள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றால் அதற்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையாலும் இந்த நிகழ்வைத் தடுக்கும் முகமான தடையுத்தரவு பிறப்பிக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் மன்றுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் உட்பட்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரதேசத்தில் வசிக்கும் நான் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஐவருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களிடம் நியாயத்தை நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். தங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசுக்கெதிராகப் போராடி எத்தனையோ அழிப்புகளை மேற்கொண்டார்கள் ஆனால் அவர்கள் இன்று தியாகிகள் என்ற பெயரில் நினைவேந்தல்கள் நடத்த முடியும். ஆனால் தமிழ் மக்களின் அடக்குமுறைக்கு எதிராக நீதியான முறையில் போராடிய எமது உறவுகளை நாம் நினைவு கூர முடியாது.

மாவீரர் தினமென்பது 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் அனுஷ்டிக்கப்படுகின்ற விடயம் அல்ல போராட்ட ஆரம்ப காலத்தில் 1989களில் இருந்தே உயிர்நீத்த உறவுகளை, பிள்ளைகளை எண்ணி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற விடயம். இதற்கான தடை என்பது தமிழ் மக்களுக்கு எதிரான தடையாகவே பார்க்கப்படும்.

தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது. இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது மக்களின் இவ்வாற விடயங்களைத் தட்டிக் கேட்பதற்கு அரசோடு ஒட்டிக்கொண்டு அபிவிருத்தி அரிச்சுவடி பேசும் அரசியல்வாதிகளுக்கு வக்கில்லை. வெறுமனே கட்டிடங்களும், வீதிகளும் எமது உணர்வுகளைத் தீர்மானதித்து விடும் என்று நினைத்து விட்டார்கள். இதற்கெல்லாம் எமது மக்களே காரணம். நாம் எமது நிலைமைகளில் இருந்து விலகியமையே இவற்றுக்குக் காரணம்.

எமது நாட்டில் மாத்திரம் விசித்திரமான கொரோனா தொற்று இருக்கின்றது. அமைச்சர்கள் பெருமளவான மக்களைத் திரட்டி நடாத்தும் நிகழ்வுகளில் எவ்வித பரவலும் ஏற்படாது. அதற்கு பொலிஸார் பாதுகாப்பும் வழங்குவார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்டவர்கள் சேர்ந்து நடத்தும் நினைவேந்தல்களின் போது மாத்திரம் கொரோனா பரவும். கொரோனா தொடக்கம் மக்களின் வாழ்வாதாரம் வரை இந்த அரசாங்கம் அனைத்திலும் அரசியலைக் கலந்து நாட்டை நாசமாக்குகின்றது என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.