கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்க கூடாது… (இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் – பொ.உதயரூபன்)

(சுமன்)
இங்கு கல்வி அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக அரசியற் செயற்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சுற்றுநிரூபத்திற்கு உடன்பட்டு செயற்பட வேண்டுமே தவிர அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்க கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவடடச் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடாபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கிண்ணியாவில் நடைபெற்ற படகு விபத்தில் மாணவர்கள் உட்பட ஆசியர் ஒருவரும் பலியானதையிட்டு எமது ஆசிரியர் சங்கம் சார்பில் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்தச் சம்பவத்திற்கு இந்த அரசு முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நீர்வழிப் பயணங்களை மாணவர்கள் மேற்கொள்ளும் பொது இந்தப் பாதையை சரியான முறையில் சீர் செய்து கொடுத்திருப்பின் அந்த மாணவர்கள் பாதுக்காப்பான முறையில் பயணத்தினை மேற்கொண்டிருக்கலாம். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்ற இந்த சூழலில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கிருக்கும் பிரபல்யமான பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. சுபீட்சத்தின் நோக்கு என்று சொல்லி அபிவிருத்தியை நோக்கி இந்த நாடு சென்ற கொண்டிருக்கின்ற நேரத்தில் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கியே இந்த நாடு செல்ல வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சம்பவத்திற்கு நாம் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் இந்த சம்பவத்திற்கு நீதியான விசாரணையொன்றை நடாத்தி இந்த மாணவர்களுக்குரிய நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகளுக்கு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

இதே போன்று மட்டக்களப்பிலும் பல பிரதேசங்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் இவ்வாறான பயணத்தினூடாவே பாடசாலைகளுக்குச் செல்லுகின்றனர். எனவே நிலைபேறான அபிவிருத்தி விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்குரிய முழுப் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் பரீட்சை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றநிரூபத்தின் பிரகாரம் மாணவர்கள் இரண்டு அணியாகப் பாடசாலைகளுக்கு வரவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். ஆனால், பரிட்சைக்கு மாத்திரம் அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் வரவழைக்கப்படுகின்றார்கள். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, சுகாதார வழிமுறைகளையும் சுற்றுநிரூபங்களையும் பேணுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாணத்தின் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் தற்போது சமப்படுத்தல் என்ற ஒரு இடமாற்ற முறைமை கடைப்பிடிக்கப்படுகின்றது. உதயபுரம் ஆசிரியர் ஒருவருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த ஆசிரியர் பிள்ளையான் அவர்களின் சிற்றூழியர் ஒருவருடன் எற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தினை உடனடியாக இரத்துச் செய்யுமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

இதேநேரம் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் அவர்களும் தனது தனியார் கல்வி நிலையத்தை நடாத்துவதற்காக தளவாய் வித்தியாலத்தில் இருந்து ஒரு ஆசிரியரை செங்கலடிக்கு மாற்றியிருக்கின்றார். எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்வி அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கின்ற விடயத்திற்கும் எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அண்மையில் ஒரு பிரபல பாடசாலையின் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஒரு அறை முழுமையாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் நீல வர்ணத்தினால் நிறந்தீட்டப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் கலாச்சா விழுமியங்கள் காணப்டுகின்றன. ஆனால், வலயக் கல்விப் பணிப்பாளர் அதனைக் கவனிக்காமல் பாடசாலை அதிபரின் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொது கட்டிடத் திறப்பு விழாவின் போது ஒரு கல் நாட்டப்பட்டிருக்கின்றது. அந்தக் கல் சட்டத்திற்கு முரணாக இருக்கின்றது.

இதே நேரம் ஒரு பிரபல பெண் பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டிருக்கின்ற நேரத்தில் இவர்களால் வெளிப்படுத்தப்பட்ட விழா தொடர்பான மலரிலும் நெறிமுறைக்கு விரோதமாக வலயக் கல்விப் பணிப்பாளரின் புகைப்படம் மேற்புறமும், மாநகர முதல்வரின் படம் கீழும் அமைந்திருந்திருந்தது.

எனவே இந்த கல்வி அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக அரசியற் செயற்பாடுகளை இங்கே நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனை விட்டு விட்டு மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கும் எமது கல்வி வலயங்களை முன்னேற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி அபிவிருத்திக்காக கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் சுற்றுநிரூபத்திற்கு உடன்பட்டு செயற்பட வேண்டுமே தவிர அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்க கூடாது என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.