வெற்றிடமாக இருந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் பதவிக்கு ஸமட் ஹமீட் நியமிக்கப்பட்டார் !

அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக மருதமுனையை சேர்ந்த சமட் ஹமீட்  தேசிய காங்கிரஸினால் பெயரிடப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் வைத்து இன்று தனது பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில், தேசிய காங்கிரஸின்  குதிரை சின்னத்தில் களமிறக்கப்பட்ட ஸப்ராஸ் மன்சூர் கல்முனை மாநகர சபையில் தேசிய காங்கிரஸ் சார்பில் கடந்த மூன்றாண்டுகளாக உறுப்பினராக இருந்து தலைமையினால் பணிக்கப்பட்ட சுழற்சியடிப்படையில் அப்பதவியை வேறு ஒருவருக்கு வழங்கும் நோக்கில் இராஜினாமா செய்திருந்தார். அவ்விடத்தை நிரப்பும் நோக்கிலையே தேசிய காங்கிரஸின் சார்பில் கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களில் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்ற தேசிய காங்கிரஸின் மருதமுனை இளைஞர் அமைப்பாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் மருதமுனை இணைப்பாளருமான பிரபல சமூக சேவகர் சமட் ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவரும், வக்பு சபை உறுப்பினருமான டாக்டர் ஏ. உதுமாலெப்பை,  பொருளாளர் வஸீர் எம். ஜுனைட், கல்முனை அமைப்பாளர் ஆசிரியர் றிசாத் செரீப், அரசியல் உயர்பீட  உறுப்பினர்கள், ஆலோசனை சபை உறுப்பினர்கள், மருதமுனை மத்தியக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.