வளர்ச்சியடைந்த சமூகத்திற்கு எதிரான சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் காணப்படுகிறது.-தவிசாளர் வாமதேவன்.

சாவகச்சேரி நிருபர்
ஜனநாயக ரீதியாக வளர்ச்சியடைந்த சமூகத்திற்கு எதிரான சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுவதாக சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் க.வாமதேவன் சுட்டிக்காட்டியுள்ளார்.அண்மையில் கொடிகாமம் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்துப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
ஜனநாயக விழுமியங்களுக்கு எதிர்மறையான இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் அன்று அரசாங்கத்தின் ஓர் அவசர தேவைக்காக தற்காலிகமாக கொண்டு வரப்பட்டது.

 இந்தச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது மாத்திரமல்ல;தாங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கைது செய்யக்கூடிய அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.இந்தச் சட்டம் நாட்டில் இருந்து முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும்.அந்தவகையில் தான் எழுச்சிப் போராட்டமாக இந்தக் கையெழுத்துப் போராட்டம் வலுப்பெறுகிறது. வயது வேறுபாடின்றி,மொழி, சமூக, இன,மத வேறுபாடின்றி இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் வலுச்சேர்த்து வருகின்றனர்.
இந்தச் சட்டம் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டாலும் கூட இன்று அதனுடைய தாக்கத்தை முஸ்லிம் சகோதரர்கள், தென்னிலங்கையில் வாழ்கின்ற சிங்கள மக்கள் என சகலரும் உணர்கிறார்கள்.
இந்தச் சட்டம் மனித விழுமியங்களுக்கு, சர்வதேச ரீதியாக நாகரீக வளர்ச்சியடைந்த சமூகத்திற்கு எதிரான சட்டமாகக் காணப்படுகிறது.ஆகவே நாங்கள் ஓர் நாகரீகமான சமூகமாக ,வளர்ந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட சமூகமாக இருக்க வேண்டுமானால் இந்த நாட்டை விட்டு பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிய வேண்டும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.