அம்பாறை மாவட்டத்தில் முதல்நிலை பெற்று சாதித்தார் சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன் யூசுப்;

(அஸ்லம் எஸ்.மௌலானா)

2021ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த முஹம்மட் ரீஹான் முஹம்மட் யூசுப் எனும் மாணவன் 191 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாம் நிலையை ஈட்டியுள்ளார்.

இம்மாணவன் இன்று திங்கட்கிழமை (14) அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் பாடசாலை நிர்வாகத்தினரால் விசேடமாக வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் இப்படசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து இந்நிகழ்வில் கலந்து கொண்டு, இம்மாணவனைப் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலிக், பாடசாலையின் பிரதி அதிபர் றிப்கா அன்ஸார், உதவி அதிபர்களான எம்.எச்.நுஸ்ரத் பேகம், ஐனுல் மர்சுனா, வலய அதிபர் எஸ்.முஸம்மில், பகுதித் தலைவர் ஷியானா நௌசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இம்மாணவன் கல்முனையைச் சேர்ந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் முஹம்மட் ரீஹான் தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த 58 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுள் மினால் கலீல் எனும் மாணவி 180 புள்ளிகளை பெற்று மேற்படி மாணவனுக்கு அடுத்ததாக இரண்டாம் நிலையை அடைந்துள்ளார். இவர் உட்பட சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் இதன்போது வரவேற்கப்பட்டனர்.

இம்முறை தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில், அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 147 என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.