தனங்கிளப்பில் மே-15 வரை கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.

சாவகச்சேரி நிருபர்
கைதடி கமநல சேவை பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு கமக்கார அமைப்பினர் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தனங்கிளப்பு கமக்கார அமைப்பிற்குட்பட்ட வயல் நிலங்களில் விவசாயிகள் சிறுதானியச் செய்கையில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை கட்டுப்படுத்தாத நிலையில் 13/03 ஞாயிற்றுக்கிழமை தனங்கிளப்பு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காலபோக நெற்செய்கைக்கு பின்னர் விவசாயிகள் வயல் நிலங்களில் சிறுதானியச் செய்கையில் ஈடுபட முன்வர வேண்டும் அவ்வாறு ஈடுபட்டால் இராணுவத்தினரால் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் தனங்கிளப்பில் பெரும்பாலானோர் சிறுதானியச் செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இது தொடர்பான விவசாயிகளால் தனங்கிளப்பு கமக்கார அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கமக்கார அமைப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்;
எந்தவொரு விவசாயியும் தமது செய்கை நிலத்தில் கட்டாக்காலிகள் காணப்பட்டால் அதனைப் பிடித்து கமக்கார அமைப்பிடம் ஒப்படைக்க முடியும்.தனங்கிளப்பில் கால்நடை வளர்ப்போர் ஆடு,மாடுகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள போதிலும் அயல் கிராமமான மறவன்புலவில் இருந்து மாடுகள் தனங்கிளப்பு வயல்களை நோக்கி வருகின்றன.தனங்கிளப்பு வயல் பகுதியில் முட்கம்பி வேலிகளால் அடைத்து வைத்து சிறுதானிய செய்கை மேற்கொள்ளப்படுகின்ற இடங்களில் கூட சில விவசாயிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் கட்டாக்காலிகள் உள்நுழைந்து சேதம் விளைவிக்கின்றன. எனவே குறித்த பகுதியில் கமக்கார அமைப்பின் அனுமதி இன்றி முட்கம்பி வேலிகளை வெட்டுபவர்கள், பாதையை திறந்துவிட்டு மூடாமல் செல்பவர்களே பயிரழிவுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.அத்துடன் மே-15 வரை கால்நடைகளைக் கட்டுப்படுத்த உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.அவ்வாறு பொறுப்புடன் நடக்காவிட்டு கால்நடைகள் பிடிக்கப்பட்டால் கமநலசேவை நிலையத்தில் தண்டப்பணம் செலுத்திய பின்னரே மாடுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பயிரழிவை ஏற்படுத்தும் மாடுகளைப் பிடிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானப் பிரதிகளை இராணுவம்,பொலிஸ்,பிரதேச செயலகம்,கமநல சேவை நிலையம் ஆகியவற்றுக்கு வழங்கி வைப்பதுடன்-இது தொடர்பாக துண்டுப்பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்