மூழ்கும் நிலையிலுள்ள அரசாங்க கப்பலில் நடுவில் அமர்ந்துகொண்டிருக்கும் முஷாரப் நயவஞ்சகனின் மொத்த உருவமாக இருக்கிறார் : ம.கா அமைப்பாளர் மனாப் காட்டம்

நூருல் ஹுதா உமர்

நயவஞ்சகனின் அடையாளங்களான பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், அவன் மீது நம்பிக்கை வைக்கப்பட்டால் மோசடி செய்வான் எனும் சகல விடயங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி மொட்டரசின் முதன்மை முட்டாக மாறி இராஜாங்க அமைச்சராக இப்போது பதவியேற்றிருக்கும் எஸ்.எம்.எம். முஷாரபை காண்கிறேன். அனைகின்ற இடத்திற்க்கு ஏற்றாற்போல பொய்களை கொண்டு ஆணியடிக்கும் ஒருவராகவும் அவர் தொடர்ந்தும் இருந்து வருகிறார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் சாடியுள்ளார்.

இன்று (24) காலை கல்முனையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய அவர், தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த தேர்தல் காலத்தில் கட்சிக்காக செலவு செய்து மும்முரமாக தேர்தல் பணிசெய்த சக வேட்பாளர்களான கே.எம்.ஏ. ரஸாக் (ஜவாத்), எம்.ஏ. தாஹீர், எம்.ஐ.எம். மாஹீர் போன்ற எவரையும் தேர்தல் பணிகளுக்காக பொத்துவிலுக்கு அனுமதிக்காது கட்சி கட்டுக்கோப்புக்களையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டார். அரசியல் பழிவாங்களினால் சிறையில் தலைவரின் குடும்பமே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதில் எவ்வித சலனமுமின்றி மொட்டுக்கு தைரியமாக முட்டுக்கொடுத்தவர் இன்று புதிய சத்தியவான் வேடம் போட்டுள்ளார்.

எவ்வித அரசியல் அனுபவமுமில்லாத எஸ்.எம்.எம். முஷாரபை கட்சி பதவிகளை வழங்கியும், இன்னோரன்ன சலுகைகளை கொண்டும் அழகுபார்த்து பாராளுமன்ற உறுப்பினராக பதவியுயர்த்தி கௌரவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் துரோகம் செய்தவர் பின்நாட்களில் ஜும்மா தொழுது விட்டு ஜும்மாபள்ளிவாசலின் மிம்பரின் முன்னிலையில் வைத்து பொய்யான கதைகளை தெரிவித்து மக்களை முட்டாள்களாக்குவதாக எண்ணி அவர் தன்னை பொய்யனாக அடையாளம் காட்டிக்கொண்டார்.

இப்போது நிமிடத்திற்கு பத்து பொய்களை கூறி எங்கு எந்த பொய்களை கூறினோம் என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். நாடறிந்த பொய்யனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட எஸ்.எம்.எம். முஷாரப் சிறுபான்மை மக்களின் உரிமைக்குரலாக இறைபக்தியுடன் ஜனநாயகத்தை மதித்து நடந்துகொண்டு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற துடித்துக்கொண்டிருக்கும் மக்களின் தலைவன் றிசாத் பதியுதீனை நோக்கி சத்தியமிட சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது.

பொத்துவில் மக்களின் வாக்குகளினால் மட்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்ததாக எண்ணிக்கொண்டு அரசியல் செய்யும் முஷாரப் அவர்கள் அரசியல் பரப்பில் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் ஏறி  இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு சமூக அரசியல் செய்வதாக இப்போது கதையளப்பது இந்த நூற்றாண்டின் முதற்தர முட்டாள்த்தனமாக நான் பார்க்கிறேன்.

 போர்ட் சிட்டி வாக்கெடுப்பு தொடர்பிலான கட்சித்தீர்மானத்தை கூட இருந்து ஊடகங்களுக்கு அறிவித்து விட்டு பிறகு கட்சி நிலைப்பாடுகள் தொடர்பில் எதுவும் தெரியாது என்று கூறிய அவர், தொடர்ந்தும் மாறி மாறி நாக்குபிரட்டிக்கொண்டிருக்கிறார். அவர் இப்போது அவரோடு இணைந்து 20க்கு கையுயர்த்தியவர்களுக்கே துரோகம் செய்துவிட்டு மக்களின் அபிலாஷைகளை மீறி பதவியாசை கொண்டு அந்த கூட்டிலிருந்தும் வெளியேறியிருப்பது அவரது அரசியலின் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது. உண்மைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை நேசிக்கும் எந்த ஆதரவாளரும் இவருடன் உறவை பேணக்கூடாது. மேலும் அவர் தலைவரை சத்தியம் பண்ண அழைக்கும் முன்னர் அவர் ஒருதடவை தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.